3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Sunday, October 16, 2011

தொழுகையில் இமாமை முந்துதல்

மனிதன் இயற்கையிலேயே அவசரக்காரனாவான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
மனிதன் (பொறுமை இழந்த) அவசரக்காரனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:11)
 


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.

الْأَنَاةُ مِنْ اللَّهِ وَالْعَجَلَةُ مِنْ الشَّيْطَانِ
நிதானம் அல்லாஹ்விடத்திலிருந்து உள்ளதாகும். அவசரம் ஷைத்தானிடமிருந்து உள்ளதாகும். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) நூல்: திர்மிதி 1935)
(இந்த ஹதீஸின் அறிவிப்பு தொடர் பலகீனமானதாகும்)

நமதருகில் நின்று தொழுவோரில் பலர் ருகூவு  ஸ{ஜுது மற்றும் தக்பீர்களில் இமாமை முந்திச் செல்கின்றனர். இமாமுக்கு முன்னரே ஸலாம் கொடுத்து விடுகின்றனர். சில சமயங்களில் நாமே இவ்வாறு நடந்துகொள்கிறோம். இதனை நாம் தவறாக நினைப்பதே கிடையாது. ஆனால் நபி(ஸல்)அவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றார்கள்.

أَمَا يَخْشَى الَّذِي يَرْفَعُ رَأْسَهُ قَبْلَ الْإِمَامِ أَنْ يُحَوِّلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ
இமாமுக்கு முன்பே தலையை உயர்த்துபவர்  அவரது தலையை கழுதையின் தலையாக அல்லாஹ் மாற்றிவிடுவதை பயந்து கொள்ளவில்லையா? (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 647)

தொழுகைக்காக வருபவரே அமைதியாகவும் நிதானமாகவும் வரவேண்டும் என்ற கட்டளையிருக்கும் போது தொழுகையையே அவசரமாகத் தொழுவது தவறில்லையா?!
இமாமை முந்திச் செல்லக் கூடாது என்பதை தவறாகப் புரிந்து கொண்ட சிலர் இமாமை விட்டும் மிகத் தாமதமாகச் செல்கின்றனர். இதுவும் முறையற்ற செயலாகும். இமாமை பின் தொடரும் முறையை மார்க்க அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். இமாம் தக்பீர் கூறி முடித்தவுடன் அவரை பின்பற்றுபவர் தனது செயல்களை ஆரம்பிக்க வேண்டும். தொழுகையின் அனைத்து நிலைகளிலும் இவ்வாறே பின்பற்றவேண்டும். தக்பீருக்கு முந்தவோ  பிந்தவோ கூடாது. இதுவே சரியான முறையாகும்.

Saturday, October 15, 2011

லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் (தேர்தல் ஸ்பெஷல்)

மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் சத்தியத்தை மறைக்க, அசத்தியத்தை நிலை நாட்ட லஞ்சம் கொடுப்பது பெருங்குற்றமாகும். ஏனெனில் நிச்சயமாக இது தவறான தீர்ப்புக் கூறவும், நிரபராதிக்கு அநீதமிழைப்பதற்கும், சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும். 


 

அல்லாஹ் கூறுகிறான்:
மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

சத்தியத்தை நிலைநாட்டுவதற்கும் அநீதியை தடுப்பதற்கும் லஞ்சத்தைத் தவிர வேறு மாற்றுவழியில்லையெனில் அதற்காக லஞ்சம் கொடுப்பது மேற்கூறிய இலஞ்ச எச்சரிக்கையில் இடம்பெறாது.

இக்காலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. சில ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தைவிட லஞ்ச வரவே அதிகம். பல நிறுவனங்களில் லஞ்சக் கவர்கள் சகஜமாக நடமாடுகின்றன. பல வேலைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை லஞ்சமின்றி சாத்தியமற்றதாகிவிட்டன. இதனால் வசதியற்றோர் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர். இது பல ஒப்பந்தங்களை மீறுவதற்கும். ஊழியர்கள் நிறுவனப் பொறுப்பாளர்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தவும் காரணமாகிறது. லஞ்சம் கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுக்கவில்ல எனில் தரமான வேலை நடைபெறுவதில்லை. அல்லது தாமதப்படுத்தப்படுகிறது. லஞ்சத்தின் காரணமாக தொழில் நிறுவனர்களில் விற்க, வாங்க பொறுப்பேற்றுள்ள பிரதிநிதிகளின் பைகளில் பொருளாதாரம் நுழைந்து விடுகிறது. இதுபோன்ற தீயவிளைவுகளின் காரணங்களினால் தான் நபி(ஸல்)அவர்கள் இத்தவறுக்கு உடன்படும் இரு தரப்பினருக்கும் பாதகமாக பிரார்த்தித்தார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: லஞ்சம் கொடுப்பவன் மீதும் வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக! (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

Thursday, October 13, 2011

மஹ்ரம் அல்லாத ஆணுடன் பெண் பயணம் செய்தல்

(மஹ்ரம் என்போர்: பெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள்.)



நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரீ)

இது ஹஜ் உட்பட அனைத்து பயணத்திற்கும் பொதுவான கட்டளையே! மஹ்ரமின்றி பயணம் செய்வதினால் அவள் பாவமான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பெண் பலவீனமானவள் என்பதால் பிறர் அவளை மிக எளிதாக தன் வசப்படுத்தி விடலாம். பெண் தனிமையிலோ, அல்லது மஹ்ரமில்லாத பிற ஆண்களுடனோ பயணம் செய்தால் அவளுடைய கண்ணியமும் பத்தினித்தனமும் சமூகத்தில் கேள்விக் குறியாகிவிடுவது நாம் அறிந்ததே!

பெண் தனியாக விமானத்தில் பயணம் செய்வதும் இது போன்றதே! அங்கு ஒருவர் அவளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளுடைய இருக்கையிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள்? என்றெண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வேறு தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏதேனும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப்பெண்ணின் தனிமைக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எனவே இவ்வாறு பயணம் செய்வதும் தவறேயாகும்.

மஹ்ரமானவர்களுக்குரிய தகுதிகள் நான்கு:
(1) முஸ்லிமாக இருக்கவேண்டும்.
(2) பருவமடைந்தவராக இருக்கவேண்டும்.
(3) அறிவுடையவராக இருக்க வேண்டும்.
(4) ஆணாக இருக்க வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதைவிட அதிகமான தொலைதூரத்திற்கு அவளுடைய தந்தை அல்லது அவளுடைய சகோதரன் அல்லது அவளுடைய மகன் அல்லது அவளுடைய கணவன் அல்லது -அவளை திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுடனே தவிர பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: இப்னுமாஜா)

Tuesday, October 11, 2011

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல்

Ahmadinejad Not Shaking Hand With Woman 

இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர். மார்க்கக் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு மேற்கத்திய கலாச்சாரங்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கும் பழக்கமுடைய ஒருவரிடம் இது தவறானது என்ற மார்க்க கட்டளையை ஆதாரத்துடன் கூறினால் உடனே, நீங்கள் பழமைவாதிகள், சந்தேக எண்ணம் கொண்டவர்கள், உறவினர்களை பிரிப்பவர்கள்... என்றெல்லாம் முத்திரை குத்திவிடுகின்றார்.

சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன் மகள், சகோதரரின் மனைவி...  போன்றோருடன் கை குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில் மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இச்செயலின் விபரீதங்களை மார்க்கக் கண்ணோட்டத்துடன் பார்ப்பார்களானால் நிச்சயமாக இவ்வாறு செய்யமாட்டார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும். (நூல்: தப்ரானீ)

நிச்சயமாக இது கையின் விபச்சாரம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: இரு கண்களும் விபச்சாரம் செய்கின்றன. இரு கைகளும் விபச்சாரம் செய்கின்றன. இரு கால்களும் விபச்சாரம் செய்கின்றன. இச்சை உறுப்பும் விபச்சாரம் செய்கிறது. (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹமத்)

நபி(ஸல்)அவர்களை விட தூய உள்ளமுடையவர் இவ்வுலகில் யாரிருக்கமுடியும்? இவ்வாறிருக்க நபி(ஸல்)அவர்களே கூறுகிறார்கள்: நிச்சயமாக நான் பெண்களிடம் முஸாஃபஹா செய்ய -கைகுலுக்க- மாட்டேன். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ருகைகா(ரலி) நூல்: இப்னுமாஜா)

நிச்சயமாக நான் பெண்களின் கைகளை தொடமாட்டேன். (நூல்: தப்ரானீ)

ஆயிஷா(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நபி(ஸல்)அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டது கிடையாது. உடன்படிக்கை கூட வார்த்தையின் மூலம்தான் செய்து கொண்டார்கள். (நூல்: முஸ்லிம்)

நற்குணமுள்ள மனைவிமார்களை நீ என்னுடைய சகோதரர்களிடம் முஸாஃபஹா செய்யாவிட்டால் தலாக் கூறிவிவேன்! என மிரட்டும் கணவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அன்னிய ஆணுடனோ முஸாஃபஹா செய்வது ஹராமாகும். அது கை உரை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ முஸாஃபஹா செய்தாலும் சரியே!

Wednesday, October 5, 2011

நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்

அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசம் கொண்டோரே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் (வணக்கத்திற்காக) நாட்டப்பட்டுள்ளவை(களான சிலை)களும் குறிபார்க்கும்(சூதாட்ட) அம்புகளும் ஷைத்தானுடைய செயல்களிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே இவைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றிபெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:90)


தவிர்ந்து கொள்ள கட்டளையிடுவது அது ஹராம் என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். மதுவை கூறுவதுடன் இணைவைப்பாளர்களின் சிலை மற்றும் அவர்களின் சூதாட்ட அம்புகளையும் அல்லாஹ் இணைத்தே கூறுகிறான். எனவே திருமறையில் தவிர்ந்து கொள்ளுங்கள் என்றுதானே வந்துள்ளது. ஹராம் என்று கூறப்படவில்லையே! என்றெல்லாம் கூற எந்த ஆதாரமும் சாத்தியமும் கிடையாது. மது அருந்துவது பற்றி கடுமையாக எச்சரிக்கும் பலநபிமொழிகளும் உள்ளன.

ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:
போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு "தீனத்துல் கப்பால்" எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று கேட்டனர். அது நரகவாசிகளின் வேர்வை அல்லது நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலைவணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அஹமத்)


நாம் வாழும் இக்காலகட்டத்தில் மது வகைகளும், போதைப்பொருட்களும் பல்கிப் பெருகிவிட்டன. பீர், ஆல்கஹால் போன்ற எத்தனை எத்தனையோ போதைப் பொருட்கள் அரபியிலும், அந்நிய மொழிகளிலும் பல பெயர்களில் அறிமுகமாகியுள்ளன. நபி(ஸல்)அவர்கள் அன்று வர்ணித்த சமுதாயத்தினர் இன்று தோன்றிவிட்டனர்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சமுதாயத்தில் சிலர் மதுவுக்கு மாற்றுப் பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அபூதாவூத்)

ஏமாற்றும் விதமாக மதுவுக்கு இன்றியமையாப் பொருள் போல பெயர் சூட்டி அதனை அருந்திக் கொண்டிருக்கின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வையும் ஈமான் கொண்டவர்களையும் அவர்கள் -நயவஞ்சகர்கள்- ஏமாற்றுகின்றனர். (இதனால்) அவர்கள் தங்களைத் தாமே தவிர (வேறெவரையும்) ஏமாற்றவில்லை. (இறை) அவர்கள் உணர்ந்து கொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:9)


மார்க்கம் மதுவிற்கு கடும் கட்டுப்பாட்டை விதிக்கிறது. போதை பொருட்களின் ஆணி வேரையே கிள்ளி எறிகிறது.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.(அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி) நூல்: முஸ்லிம்)

மதிமயங்கச் செய்யும், போதையூட்டும் அனைத்தும் -அது குறைவாக இருந்தாலும் சரியே!- ஹராம் ஆகும். அதற்கு எத்தனை மாற்றுப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தாலும் போதை என்பதில் அவையனைத்தும் ஒன்றுதான். அவையனைத்தின் சட்டமும் ஒன்றுதான்.

இறுதியாக, மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம் இதோ!
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

Monday, October 3, 2011

நறுமணங்களும் இன்றைய பெண்களும் ! ! !

பெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தனரை கடந்து சென்றால் நிச்சயமாக அவள் விபச்சாரியாவாள். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அஹமத்)

வாகன ஓட்டுனர், நடத்துனர், கடைக்காரர், பள்ளிக் கூடங்களின் வாயில் காவலர்கள் ஆகியோரின் விஷயத்தில் சில பெண்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதனை மார்க்கம் கடுமையாக எச்சரிக்கிறது. நறுமணம் பூசிய பெண் வெளியே செல்ல நினைத்தால் -அது பள்ளிவாயிலுக்கு தொழச் செல்வதானாலும் சரியே- கடமையான குளிப்புபோல் குளித்து அவ்வாசனையைப் போக்கி விட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசி, பள்ளிக்கு வந்தால் அவளிடம் நறுமணம் வீசினால் கடமையான குளிப்பு போன்று குளிக்கும் வரை அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

திருமணங்களிலும் பெண்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளப்புறப்படும் பெண்கள் நறுமணங்களும் சந்தனப் புகையும் இட்டுக் கொண்டுதான் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். மனதை ஈர்க்கும் நறுமணங்களை பூசிக் கொண்டு கடை வீதிகளிலும், வாகனங்களிலும், ஆண், பெண் இருபாலரும் கலக்கும் இடங்களிலும் உலாவருகின்றனர். அல்லாஹ்தான் இப்பெண்களுக்கு நேர்வழி காட்டவேண்டும்!

வெளி இடத்திற்கு செல்லும் பெண்கள் நிறம் வெளிப்படையாக தெரியக் கூடிய, அதே சமயம் அதிக மணமற்ற நறுமணங்களை மட்டுமே பயன்படுத்த பெண்களுக்கு மார்க்கம் அனுமதிக்கிறது.

யா அல்லாஹ்! எங்களை நீ தண்டித்து விடாதே! மடத்தனமாக நடந்து கொள்ளும் ஆண்களும் பெண்களும் செய்யும் பாவத்தின் காரணமாக நற்பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் நீ -உனது தண்டணையால்- பிடித்துவிடாதே! எங்கள் அனைவருக்கும் உனது நேரான பாதையைக் காட்டுவாயாக!

இந்த' வகை அன்பளிப்பும் வட்டியே ! ! !

மனிதனுக்கு கிடைத்துள்ள பட்டமும் பதவியும் அல்லாஹ் அவனுக்கு கொடுத்துள்ள அருட்கொடைகளில் ஒன்றாகும். எனவே அவைகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். தனது பதவியின் மூலம் முஸ்லிம்களுக்கு பயனளிப்பது இந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் முறைகளில் ஒன்றாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
உங்களில் தமது சகோதரருக்கு பயனளிக்க சக்தி பெற்றவர் அவ்வாறு செய்யட்டும்! (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்)

ஹலாலான காரியங்களில், பிறருடைய உடமைகளுக்கு தீங்கிழைக்காமல் தூய்மையான எண்ணத்துடன் தனது சகோதரருக்கு உதவி செய்து, அவருடைய கஷ்டத்தை போக்குபவர் அல்லாஹ்விடத்தில் கூலி கொடுக்கப்படுவார்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: பரிந்துரை செய்யுங்கள்! அதற்காக -அல்லாஹ்விடம்- கூலி கொடுக்கப்படுவீர்கள்! (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: புகாரீ)

ஆனால் பரிந்துரைக்கவோ, தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கவோ பகரமாக எதனையும் பெற்றுக் கொள்ளக் கூடாது.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் மற்றொருவருக்கு பரிந்துரை செய்து, அதற்காக அன்பளிப்பு கொடுக்கப்பட்டு, அதனை அவர் ஏற்றுக் கொண்டுவிட்டால் நிச்சயமாக அவர் வட்டியின் மிகப் பெரிய வாயிலுக்கு வந்துவிட்டார். (அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி) நூல்: அஹமத்)

வேலை வேண்டுமா? வேலையை மாற்றவேண்டுமா? மருத்துவ விடுமுறை வேண்டுமா? பரிந்துரை செய்ய, தொடர்பை ஏற்படுத்தித் தர இவ்வளவு தந்துவிடு! என்று பெருந்தொகையை நிபந்தனையாக கூறும் பலர் உள்ளனர். இவ்வாறு லஞ்சம் பெறுவதும். பகர நிபந்தனை இல்லாமல் அன்பளிப்பாக அளிக்கப்பட்டு அதனைப் பெறுவதும் மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையில் ஹராம் ஆகும்.
நல்லமனிதர்களுக்கு மறுமை நாளில் அல்லாஹ்விடம் கிடைக்கும் கூலியே போதுமானதாகும்.

இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில் வேலை தேடிக் கொடுத்தோ, அல்லது குறிப்பிட்ட வேலையை மார்க்கம் அனுமதித்த முறையில் முடித்துக் கொடுத்தோ அதற்காக கூலி பெறுவதில் தவறில்லை. இதற்கும் சிபாரிசு செய்து பகரம் பெறுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. எனவே சிபாரிசுக்கு பகரம் பெறுவது ஹராமாகும்.

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...