3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Saturday, September 24, 2011

கஞ்சத்தனமும் எச்சரிக்கையும் ! ! !



அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு செல்வத்தை தந்திருப்பது அல்லாஹ் அவர்களுக்கு செய்த அருட்கொடையாகும். ஆனால் நம்மில் பலர் இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்,தன்னுடைய உத்யோகத்தாலும், தனது திரமையினாலும் செல்வத்தை சம்பாதித்ததாக நினைக்கின்றனர். அதன் காரணமாக நல்வழிகளில் செலவு செய்யாமல் கஞ்சத்தனத்துடன் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட குணமுடையவர்களை அல்லாஹ் தனது திருமறையில் கடுமையாக கண்டிப்பதுடன் மட்டுமல்லாமல், நாளை மறுமையில் கடும் தன்டனையும் உண்டு என எச்சரிக்கின்றான்.

وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ ۗ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் கஞ்சத்தனதம் செய்கிறார்களோ, அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் – அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான். அவர்கள் கஞ்சத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும். வானங்கள், பூமி ஆகியவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான். (அல்குர்ஆன் ஆலு இம்ரான்3 :180)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِّنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ ۗ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன்,அத் தவ்பா, 9:34)
அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். என்று கூறினார்கள்;. (ஹதீஸ் சுருக்கம்.புகாரி 7061)
மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்:
ஒரு மனிதனிடம் இன்னொருவர் வாங்கிய தொகையை தரவில்லை என்றால், எவ்வளவு கோபப்படுகிறான் அந்த மனிதன். ஆனால் அல்லாஹ்வின் அருட்கொடைகளை கணக்கின்றி பெற்றுக்கொண்ட நாம் அவன் ஏவல் விலக்கள்களை ஏற்று நடக்கின்றோமா என்றால் இல்லை. ஆதனால் தான் வல்ல ரஹ்மான் இப்படிப்பட்ட குணமுடையவர்களை நன்றி கெட்டவர்கள் என்றும், இந்த நன்றி கெட்டத் தனத்திர்க்கு அவனே சாட்சியாக இருக்கின்றான் என்றும் கூறுகின்றான்.

إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ

அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.

وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ

இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
(அல்குர்ஆன்,அல்ஆதியாத்100:6,7,8)
தனக்கே கேடு:
கஞ்சத்தனம் செய்வதால் நம்முடைய செல்வம் நம்முடனேயே இருக்கும் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அந்த செல்வமே தனக்கு கேடாக மறுமையில் நிற்கும் என்பதையும், பெரும் அழிவைத் தரும் என்பதையும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருப்பது சத்தியத்தை புரக்கனிக்கும் செயல் என்பதையும் நாம் சிந்திப்பதில்லை.

هَا أَنتُمْ هَٰؤُلَاءِ تُدْعَوْنَ لِتُنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنكُم مَّن يَبْخَلُ ۖ وَمَن يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَن نَّفْسِهِ ۚ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنتُمُ الْفُقَرَاءُ ۚ وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُم

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள். ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் – அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் – நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், நீங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தை அவன் பகரமாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன், முஹம்மத்47:38)
நபி ஸல்லல்லாஹூஅலைஹிவசல்லம் கூறினார்கள்..
“கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.”என அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்.(நூல் புகாரி 5299)
கஞ்சத்தனம் செய்ய தூண்டுபவருக்கும் கேடு:
நம்மில் சிலர் இருக்கின்றார்கள், தானதர்மம் செய்பவர்களையும் கண்டிப்பதுடன், இப்படியெல்லாம் செலவு செய்தால் வருமை நிலைக்கு வந்துவிடுவாய் என அச்சுருத்தி, ஏதோ நன்மையான காரியம் செய்துவிட்டது போல் திருப்திபட்டுக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட மனிதர்களுக்கும் நாளை மறுமையில் நரக வேதனையுண்டு என அல்லாஹ் வண்மையாக கண்டிக்கின்றான்.

الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا

அத்தகையோர் கஞ்சத்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி,  அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.   (அல்குர்ஆன், அந் நிஸா 4:37)

الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ ۗ وَمَن يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

எவர்கள் கஞ்சத்தனம்; செய்து கஞ்சத்தனம்; செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ! எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறார்களோ!  – (இவர்களே நட்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன் .    (அல்குர்ஆன், அல்ஹதீத்57:24)
திடீரென வரும் அல்லாஹ்வின் தன்டணை:
பொருளாதாரம் நிறைந்திருக்கக்கூடியவர்கள், உல்லாச வாழ்கையையும், சுகபோக வாழ்கையையும் அனுபவிப்பதை பார்த்து நம்மில் பலர் பெருமூச்சு விடுவதை பார்க்கின்றோம். அல்லாஹ்வின் போதனைகளை, கட்டலைகளை மறந்து வாழ்கின்ற இப்படிப்பட்டவர்களுக்குத்தான், அல்லாஹ் செல்வவத்தின் வாசலை திறந்து விடுவதாக கூறுகின்றான். ஆனால், இவர்களின் இந்த உல்லாச வாழ்கையும், செல்வமும் நிரந்தரமானது அல்ல. மாராக அல்லாஹ்வின் தன்டணையைதான் கொண்டுவரும்.

فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّىٰ إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُم بَغْتَةً فَإِذَا هُم مُّبْلِسُونَ

அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் – பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர் (அல்குர்ஆன்,அன்ஆம் 6:44)
மேலும் அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்…

الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ

(அத்தகையவன் செல்வமே சதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ

நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் காக்கும்) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்றும் அவன் எண்ணுகிறான்.

كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ

அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.

وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ

ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

نَارُ اللَّهِ الْمُوقَدَةُ

அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.

الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ

அது (உடலில் பட்டதும்) இருதயத்தில் பாயும்.
(அல்குர்ஆன்,ஸூரத்துல் ஹுமஜா 104: 2-7)
தயால குணம்:
ஜாபிர்(ரலி) கூறினார்கள்…நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. பிறகு மூன்றாம் முறையாக நான் அவர்களிடம் சென்று, ‘உங்களிடம் நான் (முதல் முறையாகக்) கேட்டும் நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு மீண்டும் உங்களிடம் கேட்டேன். நீங்கள் எனக்குத் தரவில்லை. ஒன்று, நீங்கள் எனக்குத் தரவேண்டும்; இல்லையெனில், என்னிடம் நீங்கள் கஞ்சத்தனம் காட்டுவதாகப் பொருள்” என்று கூறினேன்.
அதற்கு அவர்கள், ‘நான் உங்களிடம் கஞ்சத்தனம் காட்டுகிறேன் என்றா சொன்னீர்கள்? நான் உங்களுக்குத் தராமலிருந்துவிட்ட ஒவ்வொரு முறையும் உங்களுக்குத் தர விரும்பிய நிலையில் தான் (இருந்தேன்; இருப்பினும் தவிர்க்க முடியாத காரணத்தாலேயே) அப்படிச் செய்தேன்” என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், ‘எனக்கு அபூ பக்ர்(ரலி) கைகள் நிறைய ஒரு முறை அள்ளித் தந்துவிட்டு, ‘இதை எண்ணிக் கொள்’ என்று கூறினார்கள். நான் (எண்ணிப் பார்த்த போது) அது ஐந்நூறு(திர்ஹம்) இருக்கக் கண்டேன். அபூ பக்ர்(ரலி), ‘இது போன்றதை இரண்டு முறை எடுத்துக் கொள்’ என்றார்கள்” என்று ஜாபிர்(ரலி) கூறினார்கள். அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு முன்கதிர்(ரஹ்)அவர்கள், ‘கருமித் தனத்தை விட மோசமான நோய் உண்டா?’ என்றார்கள்.
கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்பு தேடல்:
நபி(ஸல்)அவர்கள்.. கூறியதாக அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்… நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம், ‘உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை புரிவதற்காகத் தேடுங்கள்;… நான் கைபருக்குப் புறப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள். எனவே, அபூ தல்ஹா(ரலி) என்னை (தம் வாகனத்தில்) பின்னால் அமர வைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது நான் பருவ வயதை நெருங்கி விட்டிருந்த சிறுவனாக இருந்தேன். இறைத்தூதர்(ஸல்)அவர்கள் எங்கேனும் தங்கினால் அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்து வந்தேன்.
அப்போது அவர்கள், ‘இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத் தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று பிரார்த்திப்பதை அதிகமாகச் செவியுற்று வந்தேன்.    (நூல் புகாரி 2893)
“(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள். (நூல் புகாரி 4707)
அல்லாஹ் கஞ்சத்தனத்திலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

-சகோதரர்: M.S.ரஹ்மத்துல்லாஹ்

No comments:

Post a Comment

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...