3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Tuesday, October 11, 2011

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல்

Ahmadinejad Not Shaking Hand With Woman 

இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர். மார்க்கக் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு மேற்கத்திய கலாச்சாரங்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கும் பழக்கமுடைய ஒருவரிடம் இது தவறானது என்ற மார்க்க கட்டளையை ஆதாரத்துடன் கூறினால் உடனே, நீங்கள் பழமைவாதிகள், சந்தேக எண்ணம் கொண்டவர்கள், உறவினர்களை பிரிப்பவர்கள்... என்றெல்லாம் முத்திரை குத்திவிடுகின்றார்.

சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன் மகள், சகோதரரின் மனைவி...  போன்றோருடன் கை குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில் மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இச்செயலின் விபரீதங்களை மார்க்கக் கண்ணோட்டத்துடன் பார்ப்பார்களானால் நிச்சயமாக இவ்வாறு செய்யமாட்டார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும். (நூல்: தப்ரானீ)

நிச்சயமாக இது கையின் விபச்சாரம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: இரு கண்களும் விபச்சாரம் செய்கின்றன. இரு கைகளும் விபச்சாரம் செய்கின்றன. இரு கால்களும் விபச்சாரம் செய்கின்றன. இச்சை உறுப்பும் விபச்சாரம் செய்கிறது. (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹமத்)

நபி(ஸல்)அவர்களை விட தூய உள்ளமுடையவர் இவ்வுலகில் யாரிருக்கமுடியும்? இவ்வாறிருக்க நபி(ஸல்)அவர்களே கூறுகிறார்கள்: நிச்சயமாக நான் பெண்களிடம் முஸாஃபஹா செய்ய -கைகுலுக்க- மாட்டேன். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ருகைகா(ரலி) நூல்: இப்னுமாஜா)

நிச்சயமாக நான் பெண்களின் கைகளை தொடமாட்டேன். (நூல்: தப்ரானீ)

ஆயிஷா(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நபி(ஸல்)அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டது கிடையாது. உடன்படிக்கை கூட வார்த்தையின் மூலம்தான் செய்து கொண்டார்கள். (நூல்: முஸ்லிம்)

நற்குணமுள்ள மனைவிமார்களை நீ என்னுடைய சகோதரர்களிடம் முஸாஃபஹா செய்யாவிட்டால் தலாக் கூறிவிவேன்! என மிரட்டும் கணவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அன்னிய ஆணுடனோ முஸாஃபஹா செய்வது ஹராமாகும். அது கை உரை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ முஸாஃபஹா செய்தாலும் சரியே!

Wednesday, October 5, 2011

நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்

அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசம் கொண்டோரே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் (வணக்கத்திற்காக) நாட்டப்பட்டுள்ளவை(களான சிலை)களும் குறிபார்க்கும்(சூதாட்ட) அம்புகளும் ஷைத்தானுடைய செயல்களிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே இவைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றிபெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:90)


தவிர்ந்து கொள்ள கட்டளையிடுவது அது ஹராம் என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். மதுவை கூறுவதுடன் இணைவைப்பாளர்களின் சிலை மற்றும் அவர்களின் சூதாட்ட அம்புகளையும் அல்லாஹ் இணைத்தே கூறுகிறான். எனவே திருமறையில் தவிர்ந்து கொள்ளுங்கள் என்றுதானே வந்துள்ளது. ஹராம் என்று கூறப்படவில்லையே! என்றெல்லாம் கூற எந்த ஆதாரமும் சாத்தியமும் கிடையாது. மது அருந்துவது பற்றி கடுமையாக எச்சரிக்கும் பலநபிமொழிகளும் உள்ளன.

ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:
போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு "தீனத்துல் கப்பால்" எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று கேட்டனர். அது நரகவாசிகளின் வேர்வை அல்லது நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலைவணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அஹமத்)


நாம் வாழும் இக்காலகட்டத்தில் மது வகைகளும், போதைப்பொருட்களும் பல்கிப் பெருகிவிட்டன. பீர், ஆல்கஹால் போன்ற எத்தனை எத்தனையோ போதைப் பொருட்கள் அரபியிலும், அந்நிய மொழிகளிலும் பல பெயர்களில் அறிமுகமாகியுள்ளன. நபி(ஸல்)அவர்கள் அன்று வர்ணித்த சமுதாயத்தினர் இன்று தோன்றிவிட்டனர்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சமுதாயத்தில் சிலர் மதுவுக்கு மாற்றுப் பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அபூதாவூத்)

ஏமாற்றும் விதமாக மதுவுக்கு இன்றியமையாப் பொருள் போல பெயர் சூட்டி அதனை அருந்திக் கொண்டிருக்கின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வையும் ஈமான் கொண்டவர்களையும் அவர்கள் -நயவஞ்சகர்கள்- ஏமாற்றுகின்றனர். (இதனால்) அவர்கள் தங்களைத் தாமே தவிர (வேறெவரையும்) ஏமாற்றவில்லை. (இறை) அவர்கள் உணர்ந்து கொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:9)


மார்க்கம் மதுவிற்கு கடும் கட்டுப்பாட்டை விதிக்கிறது. போதை பொருட்களின் ஆணி வேரையே கிள்ளி எறிகிறது.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.(அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி) நூல்: முஸ்லிம்)

மதிமயங்கச் செய்யும், போதையூட்டும் அனைத்தும் -அது குறைவாக இருந்தாலும் சரியே!- ஹராம் ஆகும். அதற்கு எத்தனை மாற்றுப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தாலும் போதை என்பதில் அவையனைத்தும் ஒன்றுதான். அவையனைத்தின் சட்டமும் ஒன்றுதான்.

இறுதியாக, மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம் இதோ!
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

Monday, October 3, 2011

நறுமணங்களும் இன்றைய பெண்களும் ! ! !

பெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தனரை கடந்து சென்றால் நிச்சயமாக அவள் விபச்சாரியாவாள். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அஹமத்)

வாகன ஓட்டுனர், நடத்துனர், கடைக்காரர், பள்ளிக் கூடங்களின் வாயில் காவலர்கள் ஆகியோரின் விஷயத்தில் சில பெண்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதனை மார்க்கம் கடுமையாக எச்சரிக்கிறது. நறுமணம் பூசிய பெண் வெளியே செல்ல நினைத்தால் -அது பள்ளிவாயிலுக்கு தொழச் செல்வதானாலும் சரியே- கடமையான குளிப்புபோல் குளித்து அவ்வாசனையைப் போக்கி விட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசி, பள்ளிக்கு வந்தால் அவளிடம் நறுமணம் வீசினால் கடமையான குளிப்பு போன்று குளிக்கும் வரை அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

திருமணங்களிலும் பெண்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளப்புறப்படும் பெண்கள் நறுமணங்களும் சந்தனப் புகையும் இட்டுக் கொண்டுதான் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். மனதை ஈர்க்கும் நறுமணங்களை பூசிக் கொண்டு கடை வீதிகளிலும், வாகனங்களிலும், ஆண், பெண் இருபாலரும் கலக்கும் இடங்களிலும் உலாவருகின்றனர். அல்லாஹ்தான் இப்பெண்களுக்கு நேர்வழி காட்டவேண்டும்!

வெளி இடத்திற்கு செல்லும் பெண்கள் நிறம் வெளிப்படையாக தெரியக் கூடிய, அதே சமயம் அதிக மணமற்ற நறுமணங்களை மட்டுமே பயன்படுத்த பெண்களுக்கு மார்க்கம் அனுமதிக்கிறது.

யா அல்லாஹ்! எங்களை நீ தண்டித்து விடாதே! மடத்தனமாக நடந்து கொள்ளும் ஆண்களும் பெண்களும் செய்யும் பாவத்தின் காரணமாக நற்பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் நீ -உனது தண்டணையால்- பிடித்துவிடாதே! எங்கள் அனைவருக்கும் உனது நேரான பாதையைக் காட்டுவாயாக!

இந்த' வகை அன்பளிப்பும் வட்டியே ! ! !

மனிதனுக்கு கிடைத்துள்ள பட்டமும் பதவியும் அல்லாஹ் அவனுக்கு கொடுத்துள்ள அருட்கொடைகளில் ஒன்றாகும். எனவே அவைகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். தனது பதவியின் மூலம் முஸ்லிம்களுக்கு பயனளிப்பது இந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் முறைகளில் ஒன்றாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
உங்களில் தமது சகோதரருக்கு பயனளிக்க சக்தி பெற்றவர் அவ்வாறு செய்யட்டும்! (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்)

ஹலாலான காரியங்களில், பிறருடைய உடமைகளுக்கு தீங்கிழைக்காமல் தூய்மையான எண்ணத்துடன் தனது சகோதரருக்கு உதவி செய்து, அவருடைய கஷ்டத்தை போக்குபவர் அல்லாஹ்விடத்தில் கூலி கொடுக்கப்படுவார்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: பரிந்துரை செய்யுங்கள்! அதற்காக -அல்லாஹ்விடம்- கூலி கொடுக்கப்படுவீர்கள்! (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: புகாரீ)

ஆனால் பரிந்துரைக்கவோ, தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கவோ பகரமாக எதனையும் பெற்றுக் கொள்ளக் கூடாது.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் மற்றொருவருக்கு பரிந்துரை செய்து, அதற்காக அன்பளிப்பு கொடுக்கப்பட்டு, அதனை அவர் ஏற்றுக் கொண்டுவிட்டால் நிச்சயமாக அவர் வட்டியின் மிகப் பெரிய வாயிலுக்கு வந்துவிட்டார். (அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி) நூல்: அஹமத்)

வேலை வேண்டுமா? வேலையை மாற்றவேண்டுமா? மருத்துவ விடுமுறை வேண்டுமா? பரிந்துரை செய்ய, தொடர்பை ஏற்படுத்தித் தர இவ்வளவு தந்துவிடு! என்று பெருந்தொகையை நிபந்தனையாக கூறும் பலர் உள்ளனர். இவ்வாறு லஞ்சம் பெறுவதும். பகர நிபந்தனை இல்லாமல் அன்பளிப்பாக அளிக்கப்பட்டு அதனைப் பெறுவதும் மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையில் ஹராம் ஆகும்.
நல்லமனிதர்களுக்கு மறுமை நாளில் அல்லாஹ்விடம் கிடைக்கும் கூலியே போதுமானதாகும்.

இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில் வேலை தேடிக் கொடுத்தோ, அல்லது குறிப்பிட்ட வேலையை மார்க்கம் அனுமதித்த முறையில் முடித்துக் கொடுத்தோ அதற்காக கூலி பெறுவதில் தவறில்லை. இதற்கும் சிபாரிசு செய்து பகரம் பெறுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. எனவே சிபாரிசுக்கு பகரம் பெறுவது ஹராமாகும்.

Friday, September 30, 2011

தாயத்து தகடுகளில் பயன் இருப்பதாக நம்புதல்

சூனியம் மற்றும் ஜோஸியக்காரர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தாயத்து தகடு தட்டு போன்ற அல்லாஹ்வுக்கு இணைவைக்க காரணமாகும் பொருட்களில் நிவாரணம் இருப்பதாக நம்மில் பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே அதனை கழுத்தில் கட்டிக் கொள்கின்றனர். கண்திருஷ்டி போன்றவைகளிலிருந்து பாதுகாப்புத் பெற அதனை அவர்களது குழந்தைகளின் கழுத்திலும் கட்டிவிடுகிறார்கள். உடலில் கட்டிக் கொள்கிறார்கள். வீடுகளிலும் கடைகளிலும் வாகனங்களிலும் தொங்க விடுகிறார்கள்.
 
துன்பம் மற்றும் சோதனைகளிலிருந்து விடுபட பாதுகாப்புப்பெற பல வடிவங்களில் மோதிரங்களை அணிந்து கொள்கின்றனர். நிச்சயமாக இவைஅனைத்தும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதற்கு மாற்றமான கொள்கைகளாகும். தவறான இக்கொள்கைகள் ஈமானில் பலவீனத்தையே அதிகப்படுத்தும். இவைகளின் மூலம் நோய் நிவாரணம் தேடுவது ஹராம் ஆகும்.

நிவாரணத்திற்காக இவர்கள் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் தாயத்து தகடுகளில் பெரும்பாலானவை இணைவைக்கும் வாசகங்கள், ஜின் ஷைத்தான்களிடம் அடைக்கலம் தேடுதல், புரியாத வரைபடங்கள், விளங்கிக் கொள்ளமுடியாத வாசகங்கள் ஆகியவைகளைக் கொண்டதான் தயாரிக்கப்படுகின்றன.
 
மேலும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதற்காக ஓதவேண்டிய திருக்குர்ஆனில் சில வாசகங்களையும் சிலர் எழுதுகின்றனர். ஆனால் அதனுடன் ஷிர்க்கான வாசகங்களையும் கலந்து விடுகின்றனர். சில பாவிகள் திருக்குர்ஆனின் வசனங்களை அசுத்தத்தைக் கொண்டும் மாதவிடாயின் இரத்தத்தைக் கொண்டும்கூட எழுதுகின்றனர். எனவே தாயத்து தகடு தட்டு போன்றவற்றைக் கட்டுவதோ தொங்கவிடுவதோ ஹராமாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ
தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)

தாயத்து தட்டுகளில் நன்மையோ தீமையோ கிடைக்கிறது என்று நம்புகின்றவன் அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டான். அவன் அல்லாஹ்விடம் இப்பெரும் பாவத்திற்காகத் தவ்பாச் செய்யவில்லையெனில் அல்லாஹ் அவனை மன்னிக்க மாட்டான். அவனுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிடும் மேலும் அவனுக்கு சொர்க்கம் ஹராமாகி நிரந்தர நரகவாதியாகிவிடுவான்.

செயலாற்றலுக்குச் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே எனினும் தாயத்து தட்டுகள் நன்மை-தீமைக்கு காரணமாக உள்ளன என்று சிலர் எண்ணுகின்றனர். இதுவும் ஒருவகையில் இணைவைத்தலேயாகும். ஏனெனில் நன்மை தீமைக்கு காரணமாக அல்லாஹ் ஆக்காததை இவர்கள் காரணமாக எண்ணுகிறார்கள்.

சூனியம், குறி, ஜோஸியம் பார்த்தல்

சூனியம் இறைநிராகரிப்புச் செயலாகும். அது மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். சூனியம் என்பது எந்தப் பயனையும் பெற்றுத்தராத, மாறாக தீமைகளையே விளைவிக்கும் பாவச்செயலாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:
وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ
அவர்களுக்கு எந்தப் பயனும் தராத, அவர்களுக்கு துன்பமிழைக்கும் ஒன்றை- சூனியத்தை- கற்றுக் கொண்டார்கள். (அல்குர்ஆன் 2:102)

وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى
சூனியக்காரன் எங்கு வந்த போதிலும் வெற்றி பெற மாட்டான். (அல்குர்ஆன் 20:69)

1) நிச்சயமாக சூனியம் செய்பவன் காஃபிராவான். அல்லாஹ் கூறுகிறான்:

وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ
மேலும் ஸுலைமான் (சூனியம் செய்து அல்லாஹ்வை) நிராகரிக்கவில்லை. எனினும் நிச்சயமாக ஷைத்தான்கள் தான் நிராகரித்து விட்டார்கள். அவர்கள் சூனியத்தையும் பாபிலோ(ன் நகரி)னில் ஹாரூத், மாரூத் எனும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்த(தாகக் கூறி, பல)வற்றையும் மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். மேலும் அவ்விருவரும் நாங்கள் சோதனையாக இருக்கின்றோம். ஆதலால் (இதைக்கற்று) நீ காஃபிராகிவிட வேண்டாம் என்று கூறும்வரை அவர்கள் (அதனை) ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. (அல்குர்ஆன் 2:102)

சூனியம் செய்பவர்களை கொலை செய்வதே மார்க்கத்தீர்ப்பாகும். சூனியத்தால் சம்பாதிப்பது ஹராமான, இழிவான செயலாகும். அறிவிலிகளும் அநியாயக்காரர்களும் பலவீனமான ஈமான் கொண்டவர்களும் தங்களின் எதிரிகளை சூனியத்தின் மூலம் பழிவாங்குவதற்காக சூனியக்காரர்களிடம் செல்கின்றனர். அநீதம் செய்தவர்கள் அதன் எதிர்விளைவாக தங்களை சூனியம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக சூனியக்காரர்களிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.

குல்அவூது பிறப்பில் ஃபலக், குல்அவூது பிறப்பின் னாஸ் மற்றும் இவைபோன்ற சில திருமறை வசனங்களின் மூலம் -மார்க்கம் அனுமதித்த முறையில்- அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடக் கடமைப்பட்டவர்கள் ஷிர்க்கான, ஹராமான வழிகளில் எங்கோ ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.

2) நிச்சயமாக ஜோஸியக்காரர்களும் குறிகாரார்களும் மகத்தான அல்லாஹ்வை நிராகரிக்கும் காஃபிர்களாவார்கள்.

மறைவானவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறியமுடியாதபோது இவர்கள் தங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றார்கள். மூட நம்பிக்கையுடையவர்களிடம் பணம் பறிப்பதற்காக பலவழி முறைகளை கையாளுகிறார்கள். மண்ணில் கோடிட்டுப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கைரேகை பார்ப்பது, பாத்திரத்தில் நீரூற்றிப் பார்ப்பது, வெற்றிலையில் மைதடவிப் பார்ப்பது, கண்ணாடியில் பார்த்து மறைவானவற்றைக் கூறுவது போன்ற பலவழிகளில் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் ஒரு முறை உண்மை கூறினால் 99 முறை பொய்யுரைப்பார்கள். ஆனால் மதிமயங்கியவர்கள். அவர்கள் ஒரு முறை கூறிய உண்மையை வைத்துக் கொண்டு இட்டுக்கட்டி பொய்யுரைக்கும் அனைத்தையும் உண்மையென நம்பிவிடுகின்றனர். திருமணம், வியாபாரம் மற்றும் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் இன்ப, துன்பங்கள் பற்றி கேட்பதற்காகவும், காணாமல்போன பொருட்களைத் திரும்பப் பெறவும் அவர்களிடம் செல்கிறார்கள்.

3) சூனியம் மற்றும் ஜோஸியக்காரனிடம் சென்று, அவன் கூறுவதை உண்மை என நம்புபவன் இஸ்லாத்தை விட்டும் வெளியாகிவிட்ட காஃபிர் ஆவான்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:

مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ

சூனியக்காரனிடமோ, ஜோஸியக்காரனிடமோ சென்று அவன் கூறுவதை உண்மை என நம்புகின்றவன், நிச்சயமாக முஹம்மது நபி(ஸல்)அவர்களின் மீது இறக்கப்பட்ட (மார்க்கத்)தை நிராகரித்து விட்டான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா -ரலி, நூல்: அஹமத் 9171)

இவர்களுக்கு மறைவான ஞானமெல்லாம் கிடையாது என்று தெரிந்து கொண்டே அவர்களை சோதிப்பதற்காகவோ அல்லது இதுபோன்ற வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ அவர்களிடம் செல்பவன் காஃபிராகி விடமாட்டான். எனினும் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً
யாரேனும் குறிகாரனிடம் வந்து அவனிடம் ஏதேனும் கேட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: ஸஃபிய்யா -ரலி, நூல்: முஸ்லிம் 4137)

அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் நாற்பது நாட்களும் தொழுவது அவன் மீது கடமையாகும். மேலும் அவன் தான் செய்த இப்பாவத்திற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

Wednesday, September 28, 2011

அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்



3:67. எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்’ என்றும் அவர்கள் கூறுவார்கள்.

2:166. (தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களுக்கிடையே இருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டு விடும்.

2:167. (அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: ‘நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்’. இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெரும் துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான்; அன்றியும் அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகின்றவர்களும் அல்லர்.

33:68. ‘எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களை பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக’ (என்று) கூறுவர்)

33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ‘ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறுவார்கள்.

9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப் பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனையன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.

7:37. எவன் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனைச் செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கின்றானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக் கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) ‘அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே?’ எனக் கேட்பார்கள்; (அதற்கு) ‘அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்’ என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.

7:38. (அல்லாஹ்) கூறுவான்: ‘ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்’. ஒவ்வொரு கூட்டத்தாரும் நரகத்தில் நுழையும் போதெல்லாம், (தங்களுக்கு முன் அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தை அடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப் பற்றி, ‘எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இருமடங்கு வேதனையைக் கொடு’ என்று சொல்வார்கள். அவன் (அல்லாஹ்) கூறுவான்: உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு – ஆனால் நீங்கள் அதனை அறியமாட்டீர்கள்.

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...