3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Friday, September 14, 2012

எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான்


அல்லாஹ் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான், சில நாட்கள் நல்லதென்றும் சில நாட்கள் கெட்டதென்றும் கருதுவது கூடாது. இது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மிக பெரும் குற்றமும் மூட நம்பிக்கையுமாகும். ஒவ்வொரு நாளும் அது சிலருக்கு சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் சிலருக்கு கவலையான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் இருக்கும். அல்லது ஒருவருக்கு இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடக்கவும் செய்யும். இதை வைத்து அந்த நாளை நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ கூறிவிட முடியாது. இவ்வுலகம் சோதனைக் கூடமாகும். மரணிக்கும் வரை ஒவ்வொரு மனிதனும் பல விதமான சோதனைகளைக் கொண்டு சோதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பான். சோதனைகள் வரும்போது அதை ஒரு முஸ்லிம் பொறுத்துக் கொள்ளவும் பொருந்திக் கொள்ளவும் வேண்டும். அது அவனுடைய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்றது.
ithawheed.blogspot.com
இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். இப்படி ஈமான் கொள்வது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும்.
அல்லாஹ்வையும் வானவர்களையும் நபிமார்களையும் கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
ஆகவே நமக்கு நடக்கக்கூடிய நல்ல கெட்ட காரியங்கள் அனைத்தும் அல்லாஹ் நம்மீது விதித்த விதியின்படியே நடக்கின்றதென்று நம்ப வேண்டுமே தவிர, இன்று கெட்ட நாள், இதனால்தான் எனக்கு இந்த ஆபத்து நடந்ததென்று கூறுவது மூட நம்பிக்கையும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக்கூடிய ஒன்றாகும்.
சோதனையின்றி வாழ்வில்லை
அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஃமினான ஆண்களும் பெண்களும் தூய்மையானவர்களாக (பாவமற்ற நிலையில்) அல்லாஹ்வை சந்திக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் விஷயத்திலும் அவர்களின் பிள்ளைகள் விஷயத்திலும் அவர்களின் பொருள் விஷயத்திலும் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களுக்கு சோதனை வந்து கொண்டே இருக்கும். ஆதாரம்: திர்மிதி
ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது
ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை இது அல்லாஹ்வின் ஏற்பாட்டினால் தான் (களா கத்ரினால்தான்) ஏற்பட்டதென்றும், நான் பிறப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இது எழுதப்பட்டு முடிந்து விட்டதென்றும் இது நடக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லையென்றும் நம்பாத வரை அவர்கள் உண்மையான முஃமினாக முடியாது.
இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இப்னு உமரின் ஆத்மா யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! களாகத்ரை (விதியை) ஈமான் கொள்ளாதவர், உஹது மலை அளவு தங்கத்தை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்கமாட்டான் எனக்கூறி, இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை கூறினார்கள். அல்லாஹ்வையும் வானவர்களையும் ரஸுல்மார்களையும் கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
உபாதா பின் சாமித்(ரலி) அவர்கள் தன் மகனைப்பார்த்து, மகனே! உனக்கு ஏற்படுகிற துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உனக்கு வராமல் போய்விடாது என்ற உண்மையையும், உனக்கு ஏற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உனக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையும் நீ அறிந்து கொள்ளாதவரை நிச்சயமாக நீ உண்மையான ஈமானின் சுவையைப் பெற்றுக் கொள்ளமாட்டாய் எனக்கூறி, பின்வரும் ஹதீஸையும் எடுத்துக் கூறினார்கள்.
அல்லாஹ் எழுது கோலை முதலில் படைத்து நீ எழுது எனக் கட்டளையிட, எதை எழுத வேண்டும் என அது கேட்க, இறுதிநாள் வரைக்கும் எல்லாவற்றிற்கும் உண்டான விதிகளை எழுது என அல்லாஹ் கட்டளையிட்டான், என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் எனக் கூறி, மகனே! இவ்வாறு விதியை நம்பாது ஒருவர் மரணித்து விடுவாராயின் அவர் என்னை சார்ந்தவரல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனவும் எடுத்துரைத்தார்கள். ஆதாரம்: அஹ்மத்
இப்னு அபூதைலமீ அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் உபை பின் கஃபை அணுகி, என் உள்ளத்தில் விதியைப்பற்றி சிறிது சந்தேகம் உள்ளது. அதை நீக்குவதற்கு ஏதாவது சொல்லித்தாருங்கள். அல்லாஹ் அந்த சந்தேகத்தை போக்கிவிடுவான் என்று கூறினேன். அதற்கு உபை பின் கஃபு(ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். (இப்னு அபூ தைலமியே!) நிச்சயமாக உமக்கு ஏற்படும் துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உமக்கு வராமல் போகாது எண்ற உண்மையையும், உமக்கு எற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உமக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையம் அறிந்து, களா கத்ரைக் கொண்டு நீர் ஈமான் கொள்ளாதவரை உஹது மலை அளவு தங்கத்தை செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். இவ்வாறு நீர் களாகத்ரைக் கொண்டு ஈமான் கொள்ளாது மரணித்துவிட்டால் நீர் நரகவாசிகளில் ஒருவரே என்றார்கள். பின்பு நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களிடமும் ஹுஸைஃபா பின் அல்யமான்(ரலி) அவர்களிடமும் வந்தேன். இவர்கள் எல்லோரும் இது போலவே நபி(ஸல்) அவர்கள் கூறியதாக கூறினார்கள்.
ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்
சோதனை வருவது அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் நேசத்தையே வெளிக்காட்டுகின்றது.
அல்லாஹ் தன் அடியாருக்கு நலவை நாடினால் இவ்வுலகிலேயே தண்டனை (சோதனை)யை வழங்குகின்றான். அல்லாஹ் தன் அடியாருக்கு கெடுதியை நாடினால் மறுமையில் தண்டனையை முழுமையாக வழங்குவதற்காக இவ்வுலகில் எவ்வித தண்டனையும் (சோதனையும்) வழங்குவதில்லை, அதிக சோதனையுடன்தான் அதிக கூலியும் கிடைக்கும், அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான். அதை யார் பொருந்திக் கொள்கின்றார்களோ அவருக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கின்றது, யார் அதை கோபிக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் கோபம் கிடைக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி
ஸஃபர் மாதமும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதம்தான்
சோதனைகள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது என நம்ப வேண்டிய ஒரு முஸ்லிம், ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றும், அதில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்றும், பீடையயை களிப்பதற்காக ஸஃபர் மாதத்தின் மூன்றாம் புதன் கிழமை ஆற்றில் குடும்பத்துடன் குளித்து இன்னும் இது போன்ற பல சடங்குகளையும் செய்து அந்தப்பீடையை போக்கவேண்டும் என்று எண்ணி பல சடங்கு சம்ரிரதாயங்களை ஸஃபர் மாதத்தில் நமது இஸ்லாமிய பல சகோதர சகோதரிகள் செய்கின்றார்கள். இது இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான செயலும் மூட நம்பிக்கையுமாகும். இப்படிப்பட்ட இஸ்லாத்திற்கு மாற்றமான நம்பிக்கைகளை விட்டுவிட்டு அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது என்று நம்ப வேண்டும். ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றிருந்தால் அதை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட எந்த இறை வசனமோ நபி மொழியோ கிடையாது. மாறாக ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்று நம்புவதை தடுக்கும் நபிமொழியைத்தான் பார்க்க முடியும்.
இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை, துர்ச்சகுணம் பார்ப்பது கூடாது, ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது, சஃபர் (மாத பீடையும்) கிடையாது, நட்சத்திர சகுணம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்: முஸ்லிம்
ஸஃபர் மாதத்தை பீடையுள்ள மாதம் என்பதற்கு, இந்த மூட நம்பிக்கையுள்ளவர்கள் கூறும் காரணம், நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத முற்பகுதியில் நோயுற்றிருந்து அம்மாதத்தின் மூன்றாம் வாரத்தின் புதன் கிழமை நோயிலிருந்து குணமடைந்தார்கள். ஆகவே அம்மாதம் பீடையுள்ள மாதமாகும், மூன்றாம் வாரத்தில் நபி(ஸல்) அவர்கள் நோயிலிருந்து குணமடைந்தது போல், நாமும் பீடையை மூன்றாம் வாரத்தில் நீக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான வாதமாகும். நோயுறுவது பீடையா? முன்பு கூறியது போன்று இது அல்லாஹ்வின் விதிப்படி நடந்ததென்று ஒரு முஸ்லிம் நம்ம வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள், ஸஃபர் மாதத்தில் மட்டுமா நோயுற்றிருந்தார்கள், ரபீஉல் அவ்வல் மாதத்திலும்தான் நோயுற்றிருந்தார்கள், இதை யாரும் மறுக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள் நோயுற்றிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12ல் மரணித்தார்கள், அந்த நாளை யாராவது பீடையுள்ள மாதம் என்று கூறுகின்றார்களா? அதை கொண்டாடும் நாளாக அல்லவா? எடுக்கின்றார்கள். நமக்குள் நாமே முரண்படுகின்றோம்.
ஆகவே ஸஃபர் மாதத்தையும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதமாக நினைத்து நமது அன்றாட காரியங்களை செய்ய வேண்டும். ஸஃபர் மாதத்தில் ஏதும் சோதனைகள் வந்தால்கூட அது ஸஃபர் மாத்தினால் ஏற்படவில்லை, அல்லாஹ்வின் ஏற்பாட்டினால்தான் வந்தது என்று நம்ப வேண்டும். இப்படிபட்ட உறுதியான ஈமானை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!
Source : islamkalvi

Thursday, September 13, 2012

நரைமுடிக்கு கருப்பு சாயம் பூசுவதின் கேடு


சரியாகச் சொல்வதென்றால் இது ஹராமாகும். ஏனெனில் இது குறித்து நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது. ‘புறாக்களின் (கருத்த) மார்புப் பகுதியைப் போல் சிகைக்கு கருப்பு சாயம் பூசுகின்ற ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் தோன்றுவர். அவர்கள் சுவர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத், நஸயீ.
ithawheed.blogspot.com
முடி நரைத்தோர்களில் பெரும்பாலோரிடம் இச்செயல் பரவலாகக் காணப்படுகின்றது. தங்கள் நரையை கருப்புச்சாயம் பூசி அவர்கள் மாற்றி விடுகின்றனர். இவர்களது இச்செயல் பல தீமைகளின் பால் இட்டுச் செல்கின்றது. ஏமாற்றுதல், அல்லாஹ் படைத்த அமைப்பை மாற்றுதல், தன்னுடைய எதார்த்த நிலையை மறைத்து பொய்யான தோற்றத்தைக் காட்டுதல் ஆகியவை அத்தீமைகளில் சில. மனிதனுடைய பண்பாட்டின் மீது ஒரு தீய தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. சிலபோது இதனால் ஒரு வகையான ஏமாற்றத்திற்குக் கூட அவன் ஆளாகலாம்.
நபி (ஸல்) அவர்கள் தமது நரையை மருதாணி போன்றவற்றால் – அதாவது மஞ்சள் அல்லது சிகப்பு அல்லது பழுப்பு நிறத்தால் – மாற்றியிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளது.
‘மக்கா வெற்றி கொள்ளப்பட்ட தினத்தில் நபி (ஸல்) அவர்களிடம் அபூகுஹாஃபா (அபூபக்கர் (ரலி)யின் தந்தை) கொண்டு வரப்பட்டார்கள். அவருடைய தலையும், தாடியும் அதிக வெளுப்பின் காரணத்தால் வெண்ணிறப் பூக்கள், காய்கள் கொண்ட செடியைப் போன்று வெளுத்து போய் இருந்தது. (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், இந்த நரையை எதாவது வண்ணம் கொண்டு மாற்றுங்கள். கருப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்.
இவ்விஷயத்தில் பெண்ணும் ஆணைப் போன்றுதான். அவளும் தனது முடிக்கு கருப்புச்சாயம் பூசக்கூடாது என்பதே சரியான முடிவாகும்.

ஏசு கூறும் ஏகத்துவம் - கோவை அய்யூப்

பாகம் 1


பாகம் 2


பாகம் 3


பாகம் 5


பாகம் 6


Wednesday, September 12, 2012

கப்ரின் மீது அமர்தல், மிதித்தல், அடக்கஸ்தலங்களில் மல ஜலம் கழித்தல்.



‘உங்களில் ஒருவர் நெருப்பின் மீது அமர்ந்து அது அவருடைய ஆடையை எரித்து தோலையும் பதம் பார்ப்பது கப்ரின் மீது அமர்வதை விட சிறந்தது’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.
ithawheed.blogspot.com
கப்ருகளை மிதித்தல்: சிலர் இவ்வாறு செய்கின்றனர். இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது நீங்கள் அவர்களைக் காணலாம். அருகிலுள்ள கப்ருகளை மிதிப்பதை சற்றும் பொருட்படுத்த மாட்டார்கள். சிலபோது செருப்புக் கால்களுடன் மிதிப்பார்கள் – அங்கு அடக்கம் செய்யப்பட்டோருக்கு எந்த மரியாதையையும் கொடுக்காமல் இவ்வாறு செல்வார்கள். இது எவ்வளவு பெரிய பாவம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்: ‘நெருப்பின் மீதோ அல்லது (கூரிய) வாளின் மீதோ நான் நடப்பது அல்லது எனது செருப்பை எனது காலுடன் சேர்த்து நான் தைத்து விடுவது ஒரு முஸ்லிமின் கப்ரின் மீது நான் நடப்பதை விடவும் எனக்கு விருப்பமானதாகும்’ அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம்.
அப்படியானால் அடக்கச்தலத்தைக் கைப்பற்றி அதில் வியாபார நோக்குடன் கடைகளை அல்லது வீடுகளைக் கட்டுபவரின் நிலை என்ன? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கப்ருகளில் மல ஜலம் கழிப்பது: சில துர்ப்பாக்கியசாலிகள் இதைச் செய்கின்றனர். அவர்களுக்கு மல ஜலத்தினுடைய தேவை ஏற்பட்டால் சுவர் ஏறிக் குதித்து அல்லது வேறு வழியாக அடக்கஸ்தலத்திற்குள் நுழைந்து தனது அசுத்தம் மற்றும் துர்நாற்றத்தின் மூலம் அங்கு அடக்கப்பட்டிருப்பவர்களுக்கு துன்பம் தருகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அடக்கஸ்தலங்களில் மல ஜலம் கழிப்பதும், கடைவீதிக்கு மத்தியில் (வெட்கமின்றி) மல ஜலம் கழிப்பதும் என்னைப் பொருத்த வரையில் ஒரு பொருட்டே அல்ல (இரண்டும் சமம் தான்.) (இப்னு மாஜா) அதாவது கடைவீதியில் மக்களின் முன்னிலையில் மானம் திறந்த நிலையில் மல ஜலம் கழிப்பது எந்த அளவு மோசமானதோ, அதுபோல அடக்கஸ்தலத்தில் மல ஜலம் கழிப்பதும் மோசமான செயலாகும். இன்னும் சிலர் அடக்கஸ்தலங்களில் குறிப்பாக பாழடைந்த மற்றும் சுற்றுப்புறச் சுவர்கள் இடிந்து விட்ட அடக்கஸ்தலங்களில் அசுத்தங்களையும், குப்பைக் கூழங்களையும் வீசுகின்றனர். நபிமொழியில் வந்திருக்கின்ற எச்சரிக்கையில் இவர்களுக்கும் பங்குண்டு. அடக்கஸ்தலங்களைத் தரிசிக்கச் செல்லும் போது கவனிக்க வேண்டிய ஒழுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது கப்ருகளுக்கு மத்தியில் செல்ல நாடும் போது பாதணிகளைக் கழற்றி விட வேண்டும்.
Source : islamkalvi

Sunday, July 22, 2012

உங்களது தர்மம் ! ! !

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

அன்புள்ளம் கொண்ட என் சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய அஸ்ஸலாமு அழைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரஃஆத்துஹ்

3:109 وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ

3:109 வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை; எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.
ஸஹீஹுல் புகாரி 4797


கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் மீது 'சலாம்' கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். (தங்களின் மீது) 'ஸலவாத்' கூறுவது எப்படி?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்' என்று சொல்லுங்கள்!' என பதிலளித்தார்கள்.






2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.

2:262. அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்,

2:263. கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட மேலானவையாகும்; தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன்.

2:264. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.

2:265. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.

2:266. உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன; அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன; (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது; அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.

2:267. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.

2:268. (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.

2:269. தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

2:270. இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.

2:271. தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

2:272. (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.

2:273. பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.

2:274. யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

2:277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Tuesday, July 17, 2012

பெண்களும் நோன்பும் - சில விளக்கங்கள்

இஸ்லாமியப் பெண்களுக்கு இபாதத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக நோன்பு நோற்பதில் அளப்பரிய அக்கறை உண்டு. ரமழானுக்கு முன்னரே இல்லங்களைக் கழுவி தூய்மைப்படுத்தி, நோன்பிற்கும் அதனோடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் தம்மைத் தயார் படுத்திக் கொள்வர். இத்தகைய சகோதரிகளுக்காக நோன்பு நோற்பதுடன் தொடர்புபட்ட சில சட்டங்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன்.
ithawheed.blogspot.com
மாத, பிரசவ, தீட்டுடைய பெண்கள்
ஹைல், நிபாஸ் எனப்படும் நிலைகளில் பெண்கள் தவிர்க்க வேண்டியவைகளில் தொழுகை, நோன்பு, உடலுறவு கொள்ளல், கஃபாவைத் தவாப் செய்தல் என்பன அடங்கும். மற்றப்படி அவர்கள் திக்ரும் ஸலவாத்தும் ஓதலாம். மற்றவர்களுடன் ஒன்றாக உண்ணலாம், உறவாடலாம். இஸ்லாம் இவற்றை ஏனைய மதங்கள் கூறுவது போல் தீட்டாகக் கருதவில்லை. தமிழ் மொழியில் ஹைல், நிபாஸ் என்பன மாதத் தீட்டு, பிரசவத் தீட்டு என்று குறிப்பிடப்படுவதனாலேயே நாமும் குறிப்பிட்டு வருகின்றோம்.
இந்நிலையில் இருக்கும் பெண்கள் நோன்பு நோற்கலாகாது. ஆனால், இதனால் விடுபட்ட நோன்புகளை பின்னர் கழாச் சொய்ய வேண்டும்.
‘நபி(ஸல்) அவர்களது காலத்தில் நாம் மாதவிடாய்க்கு உட்பட்;டால் நோன்பைக் கழாச் செய்யுமாறு எமகு;கு ஏவினார்கள். தொழுகையைக் கழாச் செய்யுமாறு ஏவமாட்டார்கள்;’ என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)
நோன்புடன் ஒரு பெண் இருக்கையில் இந்நிலையை அடைந்தால் நோன்பு முறிந்து விடும். மஃரிபுடைய வேளைக்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் இந்நிலை ஏற்பட்டாலும் அவர் அந்த நோன்பை கழாச் செய்ய வேண்டும்.
இந்நிலையில் இருக்கும் சில பெண்கள் வீட்டில் மற்றவர்கள் நோன்புடன் இருக்கும் போது தாம் உண்பது கூடாது என்று கருதி தம்மைக் கஷ்டப்படுத்திக் கொள்கின்றனர். பிறர் அறிய உண்பதில் சங்கடங்கள் இருந்தால் தனிமையில் அவர்கள் வழமை போல் உண்பதிலோ அல்லது பருகுவதிலோ எந்தக் குற்றமுமில்லை.
சில படித்த பெண்கள் நோன்பு காலங்களில் அதிக அமல்கள் செய்யும் ஆர்வத்திலும், விடுபட்ட நோன்புகளைப் பின்னர் கழாச் செய்வதிலுமுள்ள அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டும் மாதத்தீட்டைத் தடை செய்யும் மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனர். இது குறித்து நேரடியாக எந்தத் தடையும் இல்லாவிட்டாலும் இயற்கைக்கு மாற்றமான இவ்வழிமுறையைக் கைவிடுதலே சிறந்ததாகும். ஏனெனில், இதனல் நோன்பைக் கழாச் செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. தொழுகை அவர்கள் மீது கடமையில்லை.
திக்ர், ஸலவாத்து, அல்குர்ஆனை ஓதுதல் போன்ற வழமையான இபாதத்துக்களில் அவர்கள் ஈடுபடலாம். நோன்பை மட்டும் தவிர்க்க வேண்டியது தான் பாக்கி. அதனால் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படப் போவதுமில்லை. குற்றம் பிடிக்கப் போவதுமில்லை. எனவே, இவ்வழிமுறையை நாம் கைவிட்டு இயற்கை வழியிலேயே செயற்படுவோமாக.
விடுபட்ட நோன்புகளை அடுத்த றமழான் வருவதற்கு முன்னர் கழாச் செய்திட வேண்டும். அவற்றைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும் என்ற அவசியமுமில்லை. தனித்தனியாக வசதிப்படி நோற்றுக் கொள்ளலாம். அப்படி நோற்பதாயி;ன் வெள்ளிக் கிழமை மட்டும் தனியாக நோற்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஹைல் நிபாஸுடன் இருக்கும் ஒரு பெண் ஸஹருடைய நேரத்தை அடையும் முன் சுத்தமாகி விட்டால் அவர் நோன்பு நோற்பது கடமையாகும். உதாரணமாக சுப்ஹுடைய அதானுக்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் ஹைல் நின்று விட்டால் ஸஹர் செய்து நோன்பு நோற்க வேண்டும். தொழுகைக்காக் குளித்துக் கொள்ள வேண்டும்.
ஸஹருடைய நேரம் சுபஹுடைய அதானுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே முடிவடைந்து விடுவதாக நம்பப்படுகிறது. அது தவறானதாகும். இதனைப் பின்வரும் நபிமொழிகள் உணர்த்துகின்றன.
நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் றமழான் மாதத்தில் ஸஹருடைய ஒரு அதானும் சுபஹுடைய ஒரு அதானும் கூறப்படும். இது குறித்து நபி(ஸல்) அவர்கள், ‘பிலால் இரவில் (உங்களை விழிப்படையச் செய்வதற்காக) அதான் கூறுவார். நீங்கள் உம்மி மக்தூம் (சுப்ஹுடைய) அதான் கூறும் வரை உண்ணுங்கள் எனக் கூறினார்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), ஆதாரம்: இப்னு குஸைலமா-1932)
மேற்படி ஹதீஸ் சுப்ஹுடைய அதான்வரை ஸஹருடைய நேரம் தான் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது. எனவே, ஸஹருடைய நேரத்திற்கு முன் சுத்தமாகும் பெண் மீது நோன்பு கடமையாகும். ஆனால் உடனே குளித்து விட்டுத்தான் நோன்பை நோற்க வேண்டும் என்பதில்லை. ‘நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையிலேயே விழித்து அதே நிலையிலேயே நோன்பு நோற்றார்கள்’ என நபிகளாரின் துணைவியர்களான உம்மு ஸலமா (ரழி), ஆயிஷா(ரழி) இருவரும் கூறுகின்றார். (தாரமி-1725, முஸ்லிம்-1109, அபூதாவூத்-2388, திர்மிதி-779, இப்னுமாஜா-1704, முஅத்தா-644,645) மேற்படி நபிமொழிக்கு அமைய ஸஹருடைய நேரம் முடிவடைவதற்குள் மாதத்தீட்டிலிருந்து விடுபடும் பெண்கள் அதே நிலையில் நோன்பை நோற்கலாம். தொழுகைக்காக குளித்துக் கொள்ள வேண்டும்.
பயணத்தில் பெண்கள்
பயணம் செய்யும் பெண்கள் நோன்பை விட்டு விட்டுப் பின்னர் அதனைக் கழாச் செய்து கொள்ளலாம். இது பெண்களுக்கு மட்டுமுரியதல்ல. இதனை அறியாத பல பெண்கள் தம்மைத் தாமே வருத்திக் கொள்கின்றனர்.
‘எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால் அவர் (அந்தச் சமயத்தில் நோன்பு நோற்காமல்) வேறு நாட்களில் (விடுபட்டுப் போன) அதைக் கணக்கிட்டு (நோற்றுக் கொள்வ(து அவர் மீது கடமையானதாகும்’… (2:165)
இவ்வகையில் பயணத்தில் இருக்கும் அல்லது நோயுடன் இருக்கும் பெண்கள் நோன்பை விட்டு விட்டு பின்னர் கழாச் செய்து கொள்வதற்கு அனுமதியுள்ளது. வீணே தன்னைத் தானே சிரமப்படுத்திக் கொள்ள இஸ்லாம் கூறவில்லை.
கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களும், மூதாட்டிகளும்
கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் தமக்கோ, தமது குழந்தைக்கோ பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சும் நிலையிருந்தால் நோன்பை விடலாம். அவ்வாறே வயோதிப ஆண், பெண் இரு சாராரும்கூட நோன்பை விடலாம். தாம் நோற்காக ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இவர்கள் பித்யா வழங்கப்பட்ட இந்த நோன்பை மீண்டும் கழாச் செய்ய வேண்டியதில்லை.
இந்த சலுகையை அறியாத பலர் தம்மைத் தாமே சிரமப்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் பலர் சிரமத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதனால் நோன்பை விட்டு விடுகின்றனர். ஆனால் சட்டம் தெரியாததால் ஒரு நோன்பிற்கு ஒரு ஏழைக்கு உணவு என்ற பரிகாரத்தை நிறைவு செய்வதுமில்லை.
வயோதிபர்களும் பெண்களும் பித்யா கொடுக்கும் இவ் வழக்கத்தை நடைமுறைப்படுத்தினால் இதன் மூலம் நோன்பு காலத்தில் அனேக ஏழைகளுக்கு உணவு போய்ச்சேர வழிபிறக்கும்.
சமையலில் சுவை பார்த்தல்
பெண்கள் நோன்பு கால சமையலில் உப்பு, காரம் போன்றவையைக் கூட்டிக் குறைத்து அசடு வழிவதுண்டு. உணவை சுவைபார்க்க முடியாது என்பதால் தான் இந்நிலையென தன்னிலை விளக்கம் கூறுவர். இப்னு அப்பாஸ்(ரழி), ஹஸன்(ரழி), ஆயிஷா(ரழி) போன்ற நபித் தோழர்கள் இதனைச் சரி கண்டுள்ளனர். எனவே, பெண்கள் ஆணம், கஞ்சி போன்றவற்றை நாவின் நுணியில் வைத்து சுவைபார்க்கலாம் அதனைப் பின்னர் உமிழ்ந்துவிட வேண்டும்.
இல்லறத்தில் ஈடுபடுதல்
நோன்புடன் இருக்கும் போது தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமென்றால் முத்தமிடுவது குற்றமில்லை. இரவு நேரத்தில் இல்லறத்தில் ஈடுபடுவதிலும் எந்தத் தவறும் இல்லை. இதனை ‘நபி(ஸல்) அவர்கள் நோன்புடன் இருக்கும் போது (தமது மனைவியை) முத்தமிடுவார்கள்’ (புஹரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, தாரமி) என்ற நபிமொழியும் ‘நோன்புடைய இரவில் உங்கள் மனைவியருடன் (வீடு) கூடுவது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது’ (2:187) என்ற வசனமும் உணர்த்துகின்றது. இல்லறத்தில் ஈடுபட்டாலும் இது தவறாகுமோ என்ற அச்சம் அல்லது இதனால் நோன்பின் பயன் குறைந்து விடுமோ என்ற கவலையும் பெண்களிடம் உள்ளது. இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இதனால் குளிப்புக் கடமையான நிலையில் விழிப்போர் அதே நிலையில் நோன்பைக் கூட நோற்கலாம். தொழுகைக்காகத்தான் அவர்கள் குளித்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்ட நபிமொழிகளின் மூலம் உணரலாம்.
மார்க்கச் சட்டங்களைச் சரிவர அறிந்து கொள்ளாததால் மக்கள் மார்க்கத்தைச் சிரமமானதாக எடுத்துக் கொள்கின்றனர். இஸ்லாமிய சட்டங்களை சரிவர அறிந்து இலகு மார்க்கம் இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்வோமாக.

Thursday, July 12, 2012

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா ?


  குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா? 

[ பெண்கள் எவரிடமும் கொஞ்சிப்பேசக்கூடாது என்பதல்ல! உங்கள் கணவரிடம் எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சிப்பேச வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதைவிட அதிகமாகக்கூட கொஞ்சிப்பேசலாம். கொஞ்சிப்பேசுங்கள் கெஞ்சிப்பேசுங்கள்... இது தம்பதிகளின் இல்வாழ்க்கை செழித்தோங்க உதவும். குழந்தைகளிடமும்.. ஏன் உங்கள் தாயாரிடமும் சகோதரிகளிடமும் கூட கொஞ்சிப்பேசுவதில் தவறில்லை. அது குடும்பத்தில் பாசத்தை வளர்க்கும்.]
ithawheed.blogspot.com
ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.
ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். இந்நிலையில் பெண்கள் கொஞ்சிப்பேசினால் என்னவாகும் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும்.
ஒரு பெண் ஓர் ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் வாழும் சமுதாய அமைப்பு முறை மேற்கண்டவாறு கோடிட்டுக் காட்டுகின்றது. ஆடவனிடம் பெண்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற நிலைபாட்டை சமுதாயம் அங்கீகரிக்கின்றது. காரணம் இதைச் சமுதாயம் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கின்றது.
இஸ்லாமிய மார்க்கம் இதைத் தான் வஇயுறுத்திக் கூறுகின்றது. பெண்கள் ஆண்களிடம் குழைந்து, கொஞ்சி, நயந்து பேசினார்கள் என்றால் அது அவர்கள் சபல உணர்வுகளுக்குக் காட்டும் பச்சைக் கொடியாகி விடும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
''நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்''. (அல்குர்ஆன் 33:32)
அதுவும் அல்லாஹ் யாரை நோக்கிக் கூறுகின்றான்? சதாவும் வஹீயின் பாதுகாப்பில் இருந்து கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியரை நோக்கிக் கூறுகின்றான் எனும் போது மற்றவர்களின் நிலைமை எம்மாத்திரம்?
அல்லாஹ் பெண்களை வியாபாரம், தொழில், கல்வி, குடும்ப விவகாரங்கள் தொடர்பாக வெளியே செல்வதைத் தடுக்கவில்லை. ஆனால் இந்த விவகாரங்களில் வரைகளையும், வரம்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால் இந்த வரம்புகள் இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.
  தொடரும் அவலங்கள் 
பெண்கள் இன்று வெளியே ஆட்டோ, கார், பஸ் ஆகியவற்றில் பயணம் செய்கின்றனர். இவற்றிற்கு மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் ஆட்டோ, கார், பஸ் டிரைவர்கள் கண்டக்டர்களிடம் அநாவசியமான பேச்சுக்கள்.
மளிகை, துணி, காய்கறி கடைகளில் சென்று பொருட்கள் வாங்குவதற்கு மார்க்கம் தடை விதிக்கவில்லை. ஆனால் அந்தக் கடைகளில் அதிலும் குறிப்பாக ஏ.சி. போடப்பட்ட நகைக் கடைகளில் ஒய்யாரமாக, உல்லாசமாக உட்கார்ந்து ஊர்பட்ட கதைகளைப் பேசிக் கொண்டிருப்பது.
மேற்கண்ட வியாபாரிகள் வீடுகளுக்கு வருகின்றனர். இதல்லாமல் கணவனின் நண்பர்கள் என்று பலர் வருகின்றனர். இத்தகையோரிடம் கட்டுப்பாடற்ற முறையில் பேச்சுக்கள் நீள்கின்றன.
  தொலைபேசியில் தொடரும் பேச்சுக்கள் 
இன்று தொலைபேசி முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாகும். தொழில், வியாபாரம், குடும்பம், மருத்துவம் இன்னும் எண்ணிலடங்கா துறைகள் ரீதியிலான இதன் பயன்பாடுகளை நாம் பட்டியஇட முடியாது. இன்று வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்களின் ஒரேயொரு ஆறுதல் தொலைபேசியில் தங்கள் துணைவியருடன் உரையாடுதல் தான். ஒரு தடவை மனைவியுடன் போனில் பேசி விட்டால் ஏதோ தாயகம் சென்று திரும்பிய ஒரு திருப்தி கிடைக்கின்றது.
இப்படிப்பட்ட இந்தத் தொலைபேசி, முன் பின் தெரியாத பலருடன் பல கட்டங்களில் நீண்ட நேரம் பேசுவதற்குப் பயன்படுத்தப் படுகின்றது. வட்டிக் கடைக்காரர்கள், வீடியோ கேஸட் விநியோகிஸ்தர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போன்றவர்களிடம் பேசுவதற்காக இந்தத் தொலைபேசிகள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகின்றன.
  பாட்டு கேட்டு போன் செய்தல் 
டிவிக்கள் அதிலும் கலர் டிவிக்கள் ஒவ்வொரு வீட்டிலும் சீரழிய ஆரம்பித்த பின் மார்க்கோனி கண்டுபிடித்த ரேடியோவுக்கு மவுசு இல்லாமல் போனது. நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகள். தமிழகத்தில் உள்ள மக்களை நரகப் படுகுழியில் கொண்டு போய் தள்ளுவதற்காக சன் நெட்வொர்க் நிறுவனத்தார் சன் டிவி, கேடிவி என்று எக்கச்சக்க சேனல்கள் ஆரம்பித்தது போதாது என்று சுமங்கஇ போன்ற கேபிள் டிவிக்களையும் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
பார்ப்பதற்கு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பார்த்துக் கெட்டுப் போங்கள்! பார்த்துக் கெட முடியாத இடங்களில் கேட்டுக் கொண்டே கெட்டுப் போங்கள் என்று சூரியன் எஃப்.எம். ஆரம்பித்துள்ளனர்.
உங்களை நாங்கள் கெடுக்காமல் சும்மா விட மாட்டோம் என்று இந்த எஃப்.எம். அலைவரிசைகள் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றன.
இப்போது இரண்டு சக்கர வாகனங்களில் செல்லக் கூடியவர்களும் ஒரு ரேடியோவை கட்டிக் கொண்டு பாட்டைக் கேட்டுக் கொண்டு பயணத்தைத் தொடர்கின்றனர்.
இந்த எஃப்.எம். ரேடியோக்கள் கையாளும் புது முறை, கலாச்சாரத்தை மேலும் சீரழிக்கத் துவங்கியுள்ளது. வீட்டுப் பெண்களிடம் போன் செய்து உங்களுக்குப் பிடித்த பாட்டு என்ன? என்று கேட்கின்றனர். அதற்கு பாத்திமா பீவியும், பரக்கத் நிஸாவும் எங்களுக்கு இன்ன பாட்டு வேண்டும் என்று கேட்கின்றனர். இந்தப் பாட்டை விரும்புவதற்குக் காரணம்? என்று கேட்கும் போது, நாங்கள் திருமணம் முடித்ததும் முதன் முதஇல் பார்த்த படத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது என்று பதில்.
அடுத்து நிலைய அறிவிப்பாளர், உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்? என்று கேட்கிறார். உடனே இந்தப் பெண், விஜய் என்றோ அஜீத் என்றோ தங்களுக்குப் பிடித்த நடிகரைக் கூறுகின்றார்கள். டிவியிலும் இது போன்ற கேள்விக்குப் பதில் சொல்லும் பெண்களுக்கு அருகில் கணவனும் வெட்கம் கெட்டுப் போய் நிற்கின்றான்.
இது மாதிரி சொல்லும் போது இப்படிப்பட்டவளை இழுத்துப் பிடித்து சாத்தாமல் எருமை மாடு போல் அட்டியின்றி ஆத்திரமின்றி அப்படியே அசையாமல் நிற்கின்றான். ஒரு பெண்ணின் உள்ளம் அனைத்தும் தான் கொண்ட கணவனுக்கே சொந்தம் என்ற நிலை மாறி அடுத்தவனுக்கும் அங்கு இடமிருக்கின்றது என்றாகி விடுகின்றது. அதாவது தனது கணவனை விட அஜீத் தான் தனக்குப் பிரியம் என்ற படுமோசமான நிலைக்கு இவள் போகின்றாள் என்பதை அவளுடைய வார்த்தையே எடுத்துக் காட்டுகின்றது.
பெண்களைப் பற்றி இங்கு எழுதுவதால் ஆண்கள் ரொம்ப சுத்தம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. அடுத்து அப்படியே மைக்கைத் திருப்பி கணவனிடம், உங்களுக்குப் பிடித்த நடிகை யார்? என்று கேட்கிறார்கள். இந்த ஆடவனும் வெட்கமில்லாமல் ஏதேனும் ஒரு விபச்சாரியின் பெயரைக் கூறுகின்றான். டி.வி. அறிவிப்பாளர்களைப் பொறுத்தவரை குடும்பக் கலாச்சாரத்தை குழி தோண்டிப் புதைப்பது என்ற தீர்மானத்தோடு தான் வருகின்றார்கள். அதனால் தான் ஆணிடத்தில் கேட்கும் போது, பிடித்த நடிகை யார்? என்று கேட்பதும் பெண்ணிடத்தில், பிடித்த நடிகன் யார்? என்று கேட்பதும் இவர்களது வாடிக்கையாக உள்ளது.
இப்போது விஷயத்திற்கு வருவோம். எஃப்.எம். ரேடியோ வந்த பிறகு அனைத்துப் பேருந்துகளிலும், டீக்கடைகளிலும் இந்தக் குரல் தான் ஓங்கி ஒலிக்கின்றது.
இந்தப் பெண்மணி வீட்டிஇருந்து பேசுகின்ற இந்தப் பேச்சைக் கேட்டு பேருந்தில் பயணம் செய்யும் முஸ்இலிம்கள் வெட்கித் தலை குனிய வேண்டியிருக்கின்றது. இதில் இந்தப் பெண் தான் வசிக்கின்ற முகவரி, தன் கணவர் பார்க்கும் வேலை, தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் மாமியார் மருமகள் சண்டை உட்பட எதையும் விடாது சொல்இலித் தொலைக்கின்றாள்.
இதில் நிலைய அறிவிப்பாளரிடம் பேசும் போது கொஞ்சுகின்ற கொஞ்சல், சிணுங்குகின்ற சிணுங்கல், குழைகின்ற குழைவு இத்தனையும் கேட்கும் போது உண்மையில் நம்மால் பேருந்தில் இருக்க முடியவில்லை. கணவனிடம் காட்ட வேண்டிய கொஞ்சலையும் குழைவையும் யாரோ ஒரு நிலைய அறிவிப்பாளரிடம் காட்டுவது மட்டுமல்லாமல் அதைப் பகிரங்கமாக, பலர் கேட்கும் அளவுக்குக் காட்டுகின்றார்கள்.
இதில் பெயர், முகவரியை வேறு தெளிவாக அதிலேயே அறிவித்து விடுகின்றார்கள். இதைக் கேட்பவர்களில் அல்லாஹ் கூறுவது போல் உள்ளத்தில் நோயுள்ளவர்கள், சபல புத்தியுள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்? சந்தர்ப்பம் கிடைக்காதா என்று சதி வலை பின்ன மாட்டார்களா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்: ''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்திற்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் விசாரிக்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டில் உள்ளவர்களுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.'' (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 893)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவது போல் இத்தகைய பெண்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்இயே ஆக வேண்டும்.
''அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். அன்றைய தினம் அவர்களது உண்மையான கூஇயை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவு படுத்தக்கூடியவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.'' (அல்குர்ஆன் 24:24,25)
இந்த வசனத்தின் படி மறுமையில் இவர்களது நாவுகளே அல்லாஹ்விடம் பேசும். அப்போது அல்லாஹ்விடமிருந்து தப்ப முடியாது. எனவே அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என்று இத்தகைய பெண்களுக்கு நாம் அறிவுரை கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
  எவரிடம் கொஞ்சிப்பேசலாம்? 
அதற்காகாக பெண்கள் எவரிடமும் கொஞ்சிப்பேசக்கூடாது என்பதல்ல! உங்கள் கணவரிடம் எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சிப்பேச வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதைவிட அதிகமாகக்கூட கொஞ்சிப்பேசலாம். கொஞ்சிப்பேசுங்கள் கெஞ்சிப்பேசுங்கள்... இது தம்பதிகளின் இல்வாழ்க்கை செழித்தோங்க உதவும். குழந்தைகளிடமும்.. ஏன் உங்கள் தாயாரிடமும் சகோதரிகளிடமும் கூட கொஞ்சிப்பேசுவதில் தவறில்லை. அது குடும்பத்தில் பாசத்தை வளர்க்கும்.
source : www.nidur.info

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...