3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Tuesday, September 13, 2011

இஸ்லாம் என்றால் ! !


இஸ்லாம் என்றால் ! !


(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் மஅபத் அல் ஜுஹனீ என்பவரே விதியை(நம்புவது)ப் பற்றி மாற்றுக் கருத்துத் தெரிவித்த முதலாமவராவார். அக்கால கட்டத்தில் (யஹ்யா பின் யஅமர் ஆகிய) நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ(ரஹ்) அவர்களும் 'ஹஜ்' அல்லது 'உம்ரா'ச் செய்வதற்காக(ப்புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்களது (மறுதலிப்புக்) கூற்றைப் பற்றிக் கேட்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டோம். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சூழ்ந்து கொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப்பக்கத்திலும் மற்றொருவர் இடப்பக்கத்திலும் இருந்துக் கொண்டோம். பேச வேண்டிய பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டு விடுவார் என எண்ணி நானே பேசினேன்: "அபூ அப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்துக் கல்வி பயில்கின்றனர்" என அவர்களது(நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, "ஆனால், அவர்கள் 'விதி' என்று ஏதுமில்லை எனவும், நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலாகத்தான் நிகழ்கின்றன என்றும் பேசத் துணிந்து விட்டனர்" என்றேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: "இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நான் விலகி விட்டவனாவேன்; என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்களாவர் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார் மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கைக் கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றுக் கூறிவிடுங்கள்)".

பிறகு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: "என் தந்தை உமர் பின் அல் கத்தாப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:

நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத் தலைமுடி உடைய ஒருவர் வந்தார். பயண அடையாளம் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் எவருக்கும் அவரை(யார் என)த் தெரியவில்லை. அவர் நபி(ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள் மீது வைத்துக் கொண்ட பிறகு, "முஹம்மதே! 'இஸ்லாம்' (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இஸ்லாம் என்பது, வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும் ஜகாத்தைச் செலுத்தி விடுவதும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் உங்களுக்குச் சென்று வர இயலுமெனில் இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர், "உண்மை உரைத்தீர்கள்" என்றார். கேள்வியும் கேட்டுவிட்டு பதிலை உறுதியும் படுத்துகிறாரே என்று அவரைக் குறித்து நாங்கள் வியப்படைந்தோம்.

அடுத்து அவர், "ஈமான்(இறை நம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனின் தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதாகும்" என்றுக் கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் "உண்மை உரைத்தீர்கள்" என்றார்.

அடுத்து அவர், "இஹ்ஸான்(அழகிய அணுகுமுறை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை நீங்கள் பார்ப்பது போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் அவன் உங்களைப் பார்க்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.

அவர், "எனக்குச் சொல்லுங்கள், யுக முடிவு எப்போது?" என்று மேலும் கேட்க, நபி(ஸல்) அவர்கள், "வினவுபவரைவிட வினவப் படுபவர் அறிந்தவர் அல்லர் என்று விடையளித்தார்கள். மேலும் அவர், "மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், "ஓர் அடிமைப் பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பதும் காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்திருந்த ஏழை ஆட்டு இடையர்கள், போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்" என்று கூறினார்கள்.

பிறகு அவர் சென்று விட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி(ஸல்) அவர்கள், "உமரே! கேள்வி கேட்டவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், "அவர்தாம் (வானவர்)'ஜிப்ரீல்'. உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் வந்தார்" என்றுச் சொன்னார்கள்".

அறிவிப்பாளர் : உமர் (ரலி)

குறிப்பு: நபித் தோழர்களும் அவர்களுக்குப் பின்வந்தோரும் இந்த முதல் ஹதீஸில் இடம் பெற்றாலும் மூல நிகழ்வில் நேரடித் தொடர்புடையவரும் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்ற நபித் தோழருமான உமர் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை அறிவிப்பதால் இதன் மூல அறிவிப்பாளரான உமர் (ரலி) அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் என இங்குக் குறிப்பிடப் படுகிறார்.

No comments:

Post a Comment

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...