3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Saturday, September 17, 2011

முஃமின்களே ! தாழ்த்திக் கொள்ளுங்கள் பார்வைகளை...

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அல்குர்ஆன் 24:30)

நபி(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள்:
கண்ணின் விபச்சாரம் -தவறானதைப்- பார்ப்பதாகும்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ)

திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பது, மருத்துவர், மருத்துவத்திற்காக அன்னியப் பெண்ணைப் பார்ப்பது போன்ற மார்க்கத் தேவைக்காக, நிர்ப்பந்தத்திற்காக பார்ப்பது இதிலிருந்து விதிவிலக்குப் பெரும்.

இது போல் பெண்கள் அன்னிய ஆண்களைப் பார்ப்பதும் தவறாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.(அல்குர்ஆன் 24:31)

ஒரு ஆணோ, பெண்ணோ தம் இனத்தைச் சேர்ந்த அழகானவர்களை இச்சையுடன் பார்ப்பது ஹராமாகும். மேலும் ஒரு ஆணின் மறைக்கவேண்டிய பகுதியை மற்ற ஆண் பார்ப்பதும், ஒரு பெண்ணின் மறைக்கவேண்டிய பகுதியை மற்ற பெண் பார்ப்பதும் ஹராமாகும். மறைக்கவேண்டிய எந்தப் பகுதியையும் பார்ப்பதோ, தொடுவதோ கூடாது -அது ஏதேனும் திரைக்குப் பின்னால் இருந்தாலும் சரியே!-.

பத்திரிக்கைகளில் வரும் கவர்ச்சிப் படங்கள் மற்றும் திரைப்படங்களின் மூலம் ஷைத்தான் பலரை இதுபோன்ற மானக்கேடான செயல்களில் ஈடுபடுத்துகிறான். நிச்சயமாக அவைகள் உண்மையானவைகள் அல்ல, மேலும் குழப்பத்திற்கும் இச்சையை தவறான முறையில் தீர்ப்பதற்கும் வழிவகுக்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

புறம் இஸ்லாத்தில் ஹராம்

முஸ்லிம்கள் ஒன்றுகூடும் சபையில் புறம் பேசுவது, பிறரை இழிந்துரைப்பது போன்ற செயல்கள் பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால் உள்ளங்கள் வெறுக்கும் அறுவருப்பான உவமையைக் கூறி இதனை விட்டும் தவிர்ந்து கொள்ள அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:


முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்குர்ஆன் 49:12)

புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்:
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி(ஸல்)அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி(ஸல்)அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் -புறம்- என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்)அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்)

நம்முடைய முஸ்லிம் சகோதரர் வெறுப்பதை நாம் கூறுவதே புறம் ஆகும். அது அவருடைய உடல், மார்க்கம் மற்றும் உலக விஷயம், மனோநிலை, நடைமுறை, குணம்.. ஆகிய எதனோடு தொடர்புடையதாக இருந்தாலும் சரியே! புறம் பேசுவதில் பல வகைகள் உள்ளன. ஒரு முஸ்லிமின் குறையைக் கூறுவதும் பிறரை இழிந்துரைப்பதும் புறம் பேசுவதில் ஒருவகையே!

அல்லாஹ்விடத்தில் மிகக்கேவலமான, இழிவாகக் கருத்தப்படும் புறம் பேசுதல் விஷயத்தில் மக்கள் மிகப் பொடுபோக்காக உள்ளனர்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி ஒருவன் தனது சகோதரனின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதாகும். (அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜைத்(ரலி) நூல்: அபூதாவூத்)

சபையில் இருப்பவர் இத்தீமையிலிருந்து பிறரைத் தடுப்பது கடமையாகும். மேலும் புறம் பேசப்படும் சகோதரருக்கு சார்பாக நாம் பேசவேண்டும். இவ்வாறு பேசுவதை நபி(ஸல்)அவர்கள் வரவேற்றுள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்துவிடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி) நூல்: அஹமத்)

யா அல்லாஹ்! எங்களுடைய பாவங்களையும் எங்களுடைய செயல்களில் நாங்கள் வரம்புமீறியதையும் மன்னித்தருள்வாயாக! எங்களுடைய தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக!

நபி(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தோழர்களின் மீதும் அருள்புரிவாயாக!

-அகிலத்தோரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்-

அல்லாஹ்விற்கு அடிபணிந்து பயந்த தலைவர் - உமர்(ரலி)

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள்.
 அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.
 ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.
கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள்.
 அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.
உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”
பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”
பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன்
. இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.
அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.
“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.
கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.
அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”
அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.
குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.
சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.
உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!
உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!
உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.
கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”
வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.

Tuesday, September 13, 2011

இஸ்லாம் என்றால் ! !


இஸ்லாம் என்றால் ! !


(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் மஅபத் அல் ஜுஹனீ என்பவரே விதியை(நம்புவது)ப் பற்றி மாற்றுக் கருத்துத் தெரிவித்த முதலாமவராவார். அக்கால கட்டத்தில் (யஹ்யா பின் யஅமர் ஆகிய) நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ(ரஹ்) அவர்களும் 'ஹஜ்' அல்லது 'உம்ரா'ச் செய்வதற்காக(ப்புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்களது (மறுதலிப்புக்) கூற்றைப் பற்றிக் கேட்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டோம். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சூழ்ந்து கொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப்பக்கத்திலும் மற்றொருவர் இடப்பக்கத்திலும் இருந்துக் கொண்டோம். பேச வேண்டிய பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டு விடுவார் என எண்ணி நானே பேசினேன்: "அபூ அப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்துக் கல்வி பயில்கின்றனர்" என அவர்களது(நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, "ஆனால், அவர்கள் 'விதி' என்று ஏதுமில்லை எனவும், நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலாகத்தான் நிகழ்கின்றன என்றும் பேசத் துணிந்து விட்டனர்" என்றேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: "இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நான் விலகி விட்டவனாவேன்; என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்களாவர் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார் மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கைக் கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றுக் கூறிவிடுங்கள்)".

பிறகு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: "என் தந்தை உமர் பின் அல் கத்தாப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:

நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத் தலைமுடி உடைய ஒருவர் வந்தார். பயண அடையாளம் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் எவருக்கும் அவரை(யார் என)த் தெரியவில்லை. அவர் நபி(ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள் மீது வைத்துக் கொண்ட பிறகு, "முஹம்மதே! 'இஸ்லாம்' (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இஸ்லாம் என்பது, வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும் ஜகாத்தைச் செலுத்தி விடுவதும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் உங்களுக்குச் சென்று வர இயலுமெனில் இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர், "உண்மை உரைத்தீர்கள்" என்றார். கேள்வியும் கேட்டுவிட்டு பதிலை உறுதியும் படுத்துகிறாரே என்று அவரைக் குறித்து நாங்கள் வியப்படைந்தோம்.

அடுத்து அவர், "ஈமான்(இறை நம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனின் தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதாகும்" என்றுக் கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் "உண்மை உரைத்தீர்கள்" என்றார்.

அடுத்து அவர், "இஹ்ஸான்(அழகிய அணுகுமுறை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை நீங்கள் பார்ப்பது போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் அவன் உங்களைப் பார்க்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.

அவர், "எனக்குச் சொல்லுங்கள், யுக முடிவு எப்போது?" என்று மேலும் கேட்க, நபி(ஸல்) அவர்கள், "வினவுபவரைவிட வினவப் படுபவர் அறிந்தவர் அல்லர் என்று விடையளித்தார்கள். மேலும் அவர், "மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், "ஓர் அடிமைப் பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பதும் காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்திருந்த ஏழை ஆட்டு இடையர்கள், போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்" என்று கூறினார்கள்.

பிறகு அவர் சென்று விட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி(ஸல்) அவர்கள், "உமரே! கேள்வி கேட்டவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், "அவர்தாம் (வானவர்)'ஜிப்ரீல்'. உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் வந்தார்" என்றுச் சொன்னார்கள்".

அறிவிப்பாளர் : உமர் (ரலி)

குறிப்பு: நபித் தோழர்களும் அவர்களுக்குப் பின்வந்தோரும் இந்த முதல் ஹதீஸில் இடம் பெற்றாலும் மூல நிகழ்வில் நேரடித் தொடர்புடையவரும் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்ற நபித் தோழருமான உமர் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை அறிவிப்பதால் இதன் மூல அறிவிப்பாளரான உமர் (ரலி) அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் என இங்குக் குறிப்பிடப் படுகிறார்.

வாய்மையே வெல்லும் !


வாய்மையே வெல்லும்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M.முஜீபுர்ரஹ்மான் உமரீ

இஸ்லாம் 1400 வருட கால வரலாறுப் பயணத்தில் எழுச்சியையும் வளர்ச்சியையும் மட்டுமே கண்டு வருகிறது. தோல்வியும் வீழ்ச்சியும் இஸ்லாத்திற்கு முன் மண்டியிட்டது. தடைக் சுவறுகள் தவிடுபோடி ஆயின.
தனது கடவுள்? வாதத்தையும் ஆட்சி பீடத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக இஸ்ரவேலர்களின் ஆண் இனத்தையே அழித்தான் ஃபிர்அவ்ன். ஆனால் அவனுடைய வீட்டிலேயே மூஸா (அலை) அவர்கள் செல்லப் பிள்ளையாக வளர்ந்த அர்ப்புத வரலாறுகளைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம். (பார்க்க, அல்குர்ஆன் 28:1-14)
பயந்து, பயந்து முதியவர் ஒருவர் இஸ்லாத்தைப் போதித்தார். அரசவை குறி, ஜோஸியத்திற்காக தேர்ந்தெடுப்பட்ட சிறுவனை அவர் போதிக்கும் இஸ்லாம் கவர்ந்தது. இதை அறிந்த கொடுங்கோல் ஆட்சியாளன் அந்த முதியவரை சிறுவன் கண் எதிரே சாகடித்தான். அரசனுக்கும் சிறுவனுக்கும் கடும் போரட்டங்கள்! சிறுவனை கொலை செய்ய முடியாமல் அரசன் தவிக்கிறான். இறுதியில் அந்த சிறுவனின் ஆலோசனைப்படியே பொதுமக்களுக்கு மத்தியில் ‘இந்தச் சிறுவனின் இரட்சனின் பெயரால்’ என்று கூறி அம்பெய்து கொலைசெய்கிறான். சிறுவனை கொன்றுவிட்டோம்! என்று நிம்மதிப் பெரும் மூச்சி விடுவதற்கு முன்பே அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ‘இந்த சிறுவனின் இரட்சகனாகி அல்லாஹ்தான் எங்கள் இறைவன்’ என்று இஸ்லாத்தை ஏற்றனர். பிரிந்தது ஒரு உயிர்தான்! ஆனால் அது ஒரு முஸ்லிம் சமுதாயத்தையே உருவாக்கிச் சென்றது. இவர்களின் தியாக வரலாறுகளைத்தான் ‘நெருப்புக் குன்ற வாசிகள்’ என அல்குர்ஆனின் 89வது அத்தியாயம் நினைவு கூறுகிறது. (பார்க்க, நூல்: முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களை கொலை செய்யவந்த உமரை, நபிகளாரின் உயிர்காவலராக மாற்றியது இஸ்லாம்! நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட பாசம் அண்ணலாரின் மரணித்த தகவலைக் கூட தாங்கிக் கொள்ளமுடியாத பலவீனராக்கியது! அங்கே இஸ்லாத்தின் வீரியத்திற்கு முன்னர் உமரின் வீரம் தோற்றது.
பத்ர் களத்தை விட்டும் வணிகக் கூட்டத்துடன் சாமர்த்தியமாக தப்பித்த, அபூசுப்யான் ‘பத்ருக்கு பழி தீர்ப்பதற்காக பல முறை படைதிரட்டி வந்தார். உஹது நடந்தது, அஹ்ஸாப் நடந்தது. ஹுதைபியா ஒப்பந்தம் நடந்தது.
மக்கா வெற்றியின் போது, குரைஷித் தலைவர்களே சரணடைய வருகிறார்கள், என்ற ஆதங்கத்தில் இதோ ஆயிது இப்னு அம்ரும் அபூசுஃப்யானும் வருகிறார்கள்! என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இந்த வருகையை விட இஸ்லாம் மிக கண்ணியமிக்கது! இஸ்லாம் மேலோங்கும்! தாழாது! என்றார்கள்! (நூல்கள்: தாரகுத்னீ, புகாரீ)
மக்கா வெற்றியின்போது ‘அபூசுஃப்யானின் வீட்டில் நுழைந்தவருக்கும் அடைக்களம்!’ என்று அறிவித்து அபூசுஃப்யான் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சிறப்பிக்கின்றார்கள். (நூல்: முஸ்லிம்)
அபூசுஃப்யான் (ரலி) அவர்களை முஸ்லிம் கண்டு கொள்ளவோ, அமருமாறு கூறுவதோ கிடையாது, இந்நிலையில், அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் நபியே! என்னிடமிருந்து நீங்கள் மூன்றை ஏற்றுக் கொள்ளவேண்டும்! என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சரி! ஏற்றுக் கொள்கிறேன் என்றார்கள். அரபு மக்களில் மிகவும் கவர்ச்சி மிக்க, அழகான என்னுடைய மகள் உம்மு ஹபீபாவை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன்! என்றார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இரண்டாவதாக, என்னுடைய மகன் முஆவியாவை உங்களுடைய எழுத்தாளனாக நியமிக்கின்றேன்! என்றார்கள். அதையும் ஏற்றுக் கொண்டார்கள். மூன்றாவதாக, நான் முஸ்லிம்களை எதிர்த்து யுத்தம் செய்தது போன்று இறை நிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போரிட என்னை படைத் தளபதியாக்க வேண்டும்! என்றார்கள். அதையும் நபி (ஸல்) அவர்கள் ஏற்றார்கள்.
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் முன்வைக்கும் அனைத்துக் கோரிக்கைகளையும் மறுக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்வராக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள் என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூசுமைல் அவர்கள் கூறுகிறார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் -ரலி, நூல்: முஸ்லிம்)
மக்கா வெற்றியின்போது, அபூசுஃப்யானையும் அவர்களின் சஹாக்களான குரைஷிகளையும் பழிவாங்க வேண்டும் என முறையிட முனைந்தேன். ‘உங்கள் மீது இன்றைய தினம் எந்தக் குற்றமுமில்லை! அல்லாஹ் உங்களை மன்னிப்பான்! அவன் கருணையாளர்களில் மிகப் பெரும் கருணையாளன் (அல்குர்ஆன் 12:92) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதைக் கேட்ட நான் அதிர்ச்சியால் மௌனமானேன் என்றார்கள் உமர் (ரலி).
சமூக வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் வரலாறு முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு! எனவே நம்முடைய நடவடிக்கைகளை படிப்பினை தரும் வரலாறாக மாற்றவேண்டும். இஸ்லாத்தின் எதிரிகளை அதன் சேவகர்களாக மாற்றியமைத்த வரலாறு கண்டோம். வாய்மையான நடத்தைகளால் மனித உள்ளங்களை வெல்வோமாக!

எம். முஜீபுர்ரஹ்மான் உமரீ M.A.
வெளியீடு: அஹ்லுஸ் ஸுன்னா சிற்றிதழ்

சகுனம் இல்லை நற்குறி உண்டு

சகுனம் இல்லை நற்குறி உண்டு.

எழுதியவர்/பதிந்தவர்/உரை ஜாஃபர் அலி
1437. நபி (ஸல்) அவர்கள், ‘தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(மங்கலகரமான) நல்ல சொல்” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி :5776 அனஸ் (ரலி).
1438. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்பதென்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :5754 அபூஹூரைரா (ரலி).

1439. தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனமும் கிடையாது. அபசகுனம் (இருக்க வேண்டுமென்றால்) மனைவி, வீடு, வாகனம் ஆகிய மூன்றில்தான் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5753 இப்னு உமர் (ரலி).

1440. அபசகுனம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும், வீட்டிலும் தான் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2859 ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ (ரலி) .

தகனம் செய்யப்பட்ட மையத்துக்கு கேள்வி கணக்கு உண்டா?

தகனம் செய்யப்பட்ட மையத்துக்கு கேள்வி கணக்கு உண்டா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி


அடக்கம் செய்யப்படுகின்ற ஜனாஸாவுக்கு கேள்வி கணக்கு உண்டு என்பதை எல்லோரும் அறிந்து வைத்துள்ளோம். அப்படியானால் தகனம் செய்யப்பட்டு (எரிக்கப்பட்டு) சாம்பலை கடலில் கரைத்து விடக் கூடிய ஜனாஸாவுக்கு கேள்வி கணக்கு வேதனை இல்லையா? என்ற கேள்வியை பலரும் கேட்பதுண்டு.
அதுபோல் கடலில் அல்லது ஆற்றில் மூழ்கி மீன்களுக்கு இரையாகிப் போன மையத்துகளுக்கும் குண்டு வெடிப்பில் சிதைந்து போன மையத்துக்ளுக்கும் இது போன்ற நிலையில் உள்ள மையத்துக்களுக்கும் கேள்வி கணக்கு உண்டா? வேதனை உண்டா? என்றும் கேட்கின்றனர். அல்லாஹ்வின் வல்லமையை தெரிந்து கொண்டால் இதற்கான பதிலும் கிடைத்துவிடும்.
அல்லாஹ் மனிதனை (படைப்பினங்களை) படைக்கும்போது எந்த முன்மாதிரியுமின்றி அவன் நினைத்த மாதிரி படைத்தான். ஒரு துளி நீரிலிருந்துதான் மனிதனை படைத்தான். அல்லாஹ் ஏதாவது ஒன்றை படைக்க நாடினால் ‘ஆகுக’ என்று கூறிவிடுவான். அது உடனே (ஒரு படைப்பாக) ஆகிவிடும். இப்படியான வல்லமை படைத்த அல்லாஹ்வுக்கு, தகனம் செய்யப்பட்ட கருகி சாம்பலாகிப் போன சிதைந்துப் போன உடல்களை மீண்டும் ஒன்று சேர்க்க முடியாதா? கேள்வி கேட்க முடியாதா? ஆற்றலும் வல்லமையுமுள்ள அல்லாஹ்வுக்கு இது மிகவும் இலகுவான காரியம். பின்வரும் குர்ஆன் வசனத்தையும் ஹதீஸையும் நிதானமாக படியுங்கள். சந்தேகத்திற்கு தெளிவான பதில் கிடைக்கும்.
“மனிதனை (ஒரு துளி) விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில் லையா? (இப்போது) அவனோ நம்மை மறு த்து) பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான்.
அவன் நமக்கு (ஒரு) உதாரணம் காட்டுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்? என்று கேட்கிறான்.
“முதல் தடவை இதை யார் படைத்தா னோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று நபியே நீர் கூறுவீராக. (36:77-79)
நபி (ஸல்) அவர்கள் முன்சென்ற அல்லது உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அல்லாஹ் அவருக்குச் செல்வத்தையும் குழந்தையையும் வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கியபோது அவர் தம் மக்களிடம் உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன் என்று கேட்டார். அவர்கள் சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று பதில் கூறினர். அவர் தமக்காக எந்த நன்மையும் சேமித்திருக்கவில்லை.
அல்லாஹ்வின் முன்னிலையில் தாம் சென்றால் தம்மை அவன் வேதனை செய்துவிடுவான் என அவர் அஞ்சினார். ஆகவே (அவர் தம் மக்களிடம்) நன்றாக கவனியுங்கள். நான் இறந்து விட்டால் என்னைப் பொசுக்கி விடுங்கள். (தகனம் செய்து விடுங்கள்) நான் (வெந்து) கரியாக மாறிவிட்டால் என்னைப் பொடிப் பொடியாக்கிவிடுங்கள். அல்லது துகள் துகளாக்கி விடுங்கள். பிறகு சூறாவளிக் காற்று வீசும் நாளில் காற்றில் என்னைத் தூவி விடுங்கள் என்று கூறி தாம் கூறியபடி செய்ய வேண்டுமென அவர்களிடம் உறுதி மொழியும் வாங்கிக் கொண்டான்.
என் இறைவன் மீதாணையாக! அவ்வாறே அவர்களும் செய்தனர். அப்போது அல்லாஹ், (தூவி விடப்பட்ட சாம்பலை) ஒன்று சேர்த்து மனிதனாக) ஆகிவிடு என்று கூறினான். உடனே அவர் மனிதராக (உயிர் பெற்று) எழுந்து நின்றார். அவரிடம் அல்லாஹ் என் அடியானே! இவ்வாறு நீ செய்யக் காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு அந்த மனிதர் உன்னைக் குறித்த அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது என்று பதிலளித்தார். ஆகவே அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான். அருள் புரிந்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி) ஹுபைதா (ரலி) நூல்: புகாரி (3478, 3479, 3481, 6480, 6481)

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...